பக்கம்:நித்திலவல்லி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

223



கதவை நெருங்கித் தன் வலது கண்ணைத் துளையருகே அணுகச் செய்து பதித்தாற்போல ஆவலையும் பரபரப்பையும் தவிர்க்க முடியாமல் வெளியே பார்த்தான் இளையநம்பி.

பூதபயங்கரப் படைவீரர் மூவர் உருவிய வாளும் கையுமாக வாயிற்படிகளில் நின்று கொண்டிருந்தனர். வெளிப்படையாக நன்கு தெரியும் பூத பயங்கரப் படையின் தோற்றத்திலேயே அவர்கள் வந்து அந்த மாளிகை வாயிற்படியில் நின்று கதவைத் தட்டுவதிலிருந்து ஏதோ தீர்மானமுற்றுச் சந்தேகத்துடனேயே அவர்கள் அங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

‘பார்த்தாயிற்று! இனி நாம் செய்யவேண்டியது என்ன?’ என்று இரத்தினமாலையும் அழகன்பெருமாளையும் வினவுகின்ற முகபாவனையோடு திரும்பிப் பார்த்தான் இளையநம்பி.

“கதவைத் திறப்பது தாமதமாகத் தாமதமாக, வெளியே அவர்களுடைய சந்தேகமும், சினமும் அதிகமாகும். விரைந்து முடிவு செய்து, செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்"-என்றாள் இரத்தினமாலை. அழகன்பெருமாள் இதையே வேறுவிதமாகக் கூறினான்:-

“இரண்டே இரண்டு வழிகள்தான் நாம் நம்புவதற்கு மீதமிருக்கின்றன. கதவைத் திறப்பதற்குக் கால தாமதம் செய்யுமாறு இரத்தினமாலையிடம் சொல்லிவிட்டு, அவள் அப்படிக் காலதாமதம் செய்யும் அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நலிந்த நிலையில் படுத்திருக்கும் தேனூர் மாந்திரீகன் உட்பட நாமனைவரும் நிலவறை வழியே இங்கிருந்து தப்பி வெளியேறிவிட வேண்டும். அல்லது கதவை உடனே திறந்து, அவர்களை உள்ளே விட்டபின் தந்திரமாக நாமனைவரும் சேர்ந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு, வந்திருக்கும் மூவரையும் எதிர்த்து அழிக்க வேண்டும்.”

“அப்படியே அவர்களை அழித்துவிட்டாலும், நாம் உடனே இங்கிருந்து வெறியேறித் தப்ப வேண்டுமே தவிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/224&oldid=945239" இலிருந்து மீள்விக்கப்பட்டது