பக்கம்:நித்திலவல்லி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

225


அவ்வளவு எளிமையாக வெளியே இருப்பவர்கள் உடைத்து விட முடியாது என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது.

சிந்தனையில் நேரம் கடந்து கொண்டே இருந்ததனால் விரைந்து முடிவு செய்ய இயலவில்லை. அந்த நிலையில் இளையநம்பியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அழகன் பெருமாளும், இரத்தினமாலையும் உடன்பட்டனர். இளையநம்பி தன் மனத்தில் அப்போது தோன்றிய முடிவைச் சொன்னான்:

“எப்போது இந்த மாளிகையையும் இதில் தங்கியிருப்ப வர்களையும் சந்தேகப்பட்டுச் சோதனையிடுவதற்குப் பூத பயங்கரப் படைவீரர்கள் முன் வந்து விட்டார்களோ அதற்கப்புறம் இனிமேல் இரத்தினமாலை இதில் தங்கினாலும் ஆபத்து வராமலிருக்க முடியாது. ஆகவே நீ, நான், குறளன், திருமோகூரிலிருந்து வந்திருக்கும் கொல்லன் ஆகிய நால்வரும் கதவருகே அணிவகுத்து நின்று வெளியேயிருந்து உள்ளே வருகிறவர்களை எதிர்க்க வேண்டும் அழகன் பெருமாள்! உள்ளே வருகிறவர்களை நமனுலகுக்கு அனுப்பி விட்டுப் பின்னர் எல்லோருமே இங்கிருந்து தப்பி விடலாம் என்பது என் கருத்து. கொல்லனையும், குறளனையும் உடனே கூப்பிடுவதுடன் நம் நால்வருக்கும் நான்கு வாள்களும் வேண்டும் அழகன் பெருமாள்!”

“இந்த மாளிகையில் படைக்கலங்களை இரகசியமாக மறைத்து வைத்திருக்கும் இடம் எனக்கு மட்டுமே தெரியும். வாள்களை நான் கொண்டு வருகிறேன்"-என்று இரத்தின மாலை விரைந்தாள். குறளனையும் திருமோகூர்க் கொல்லனையும் அழைத்து வர அழகன் பெருமாள் ஓடினான். இயல்பை மீறிய பரபரப்பும் வேகமும் அப்போது அங்கே வந்து சூழ்ந்தன. ஒவ்வொரு விநாடியும் விரைவாகவும் அர்த்தத்தோடும் நகர்வது போலிருந்தது.

ஒளி மின்னும் கூரிய வாள்கள் வந்தன. கொல்லனும், குறளனும் வந்தார்கள். அழகன் பெருமாள், இளைய நம்பி, கொல்லன், குறளன் ஆகிய நால்வரும் உருவிய வாள்களுடன்

நி.வ - 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/226&oldid=715390" இலிருந்து மீள்விக்கப்பட்டது