பக்கம்:நித்திலவல்லி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

நித்திலவல்லி / முதல் பாகம்



நின்று கொண்டனர். கதவை இரத்தினமாலை திறக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தான் இளையநம்பி.

அவள் கதவைத் திறக்கு முன் கொல்லன் மூலம் வந்து சேர்ந்திருந்த பெரியவரின் ஓலையை, ‘அழகன்பெருமாள் வாசித்து முடித்த பின் அவள் வாசித்தாளா' என்பதைக் கேட்டு ‘வாசித்தேன்’... என்பதற்கு அடையாளமாக அவள் தலையசைத்த பின் ஒரு வியூகமாக அவர்கள் நால்வரும் நின்று கொண்டார்கள். அவள் திறக்கப் போகிற கதவுகளின் உட்புற மறைவில் நின்று வெளியே இருக்கும் பூதபயங்கரப்படை வீரர்கள் உள்ளே காலடி வைத்ததும், நால்வருமாகப் பாய்ந்து ஒரே சமயத்தில் தாக்குவது என்று அவர்கள் நினைத்திருந்தனர். கதவைத் திறக்கிறவள் பெண்ணாயிருப்பதைக் கண்டு, வெளியே இருந்து உள்ளே புகுகின்றவர்கள் அலட்சியமாகவும், எச்சரிக்கை உணர்வு அற்றவர்களாகவும் இருக்கும்போது, திடுமெனத் தாக்க வேண்டுமென்பதை அவர்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இரத்தினமாலை மாளிகையின் உள்ளே ஏதோ காரியமாக இருந்தவள்-அப்போதுதான் கதவைத் தட்டும் ஓசை கேட்கத் திறப்பது போல் மெல்ல வாயிற் கதவைத் திறந்தாள். பக்கத்துக்கு இருவராகப் பிரிந்து உருவிய வாளுடன் நின்ற இளையநம்பி முதலியவர்கள் திறக்கப்படும் கதவின் பின்புறமாக மறைவிடம் தேடினர்.

அப்போதிருந்த மனநிலையில் திறக்கப்படுகிற கதவு கிறீச்சிடும் மர்மச் சப்தம் கூட உள்ளே நுழைகிற மூவரின் மரண ஓலத்துக்கு முன்னடையாளம் போல் இரத்தினமாலைக்குக் கேட்டது. முகத்தில் மலர்ச்சியுடனும், முறுவலுடனும் ஒரு வேறுபாடும் காட்டாமல், சுபாவமாக வரவேற்கிறவள் போல் அந்த முன்று பூதபயங்கரப் படைவீரர்களையும் அவள் எதிர் கொண்டாள்.

வந்தவர்கள் மூவரும் கடுமையான கேள்விகள் எதையும் தன்னிடம் கேட்காமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/227&oldid=945232" இலிருந்து மீள்விக்கப்பட்டது