பக்கம்:நித்திலவல்லி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை! பாண்டியர்களைக் கலகத்துக்குத் தூண்டும் மூல சக்திகள் எங்கு இருக்கின்றன என்று கண்டு பிடித்து அழிக்க வேண்டும். அதைச் செய்யாத வரை நம்முடைய பூத பயங்கரப் படையின் திறமையை நான் போற்ற முடியாது” என்றான் கலிய மன்னன். இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அரசனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிப்பதையும் கண்கள் இரண்டும் நெருப்புக் கோளங்களாகக் கனல்வதையும் கண்டு பூத பயங்கரப் படைத் தலைவனின் முகம் இருண்டது. குறை முழுமையும் தங்களைச் சேர்ந்தது என அரசன் ஒரேயடியாகத் தங்கள் மேல் குற்றம் சுமத்தியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும், அரசனுடைய கோபத்துக்கு அஞ்சி அவன் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்வது போல் வாளாவிருந்தான்.

அப்போது அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் கலிய மன்னனின் இருக்கைக்கு இரு புறமும், பணிப் பெண்கள் இருவர் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்ப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்ட அரசனின் சினம் திடீரென்று அவர்கள் மேல் திரும்பியது. கலிய மன்னனின் ஆத்திரத்தைக் கண்டு வெருண்டோடினர் அந்தப் பெண்கள். மீண்டும் பூத பயங்கரப் படையினரின் தலைவன் பக்கமாகத் திரும்பி இரைந்தான் அரசன்;

"இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் களப்பிரர் அல்லாதார் யாரும் இருக்கலாகாது என்று முன்னெச்சரிக்கையாக உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ தவறு செய்திருக்கிறாய்! நாம் பாலியிலேயேதான் உரையாடுகிறோம் என்று நீ சமாதானம் சொல்ல முடியாது. கோநகரிலும், அரண்மனையிலும் உள்ள பெரும்பாலான தமிழர்கள் நன்றாகப் பாலி மொழியைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.”

“தெரியும். ஆனால் இந்தப் பெண்கள் இருவரும் அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிர். இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/237&oldid=946350" இலிருந்து மீள்விக்கப்பட்டது