பக்கம்:நித்திலவல்லி.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

239



அரண்மனையிலிருந்து எங்கும் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது.”

“நீ அப்படி நினைக்கிறாய்! நான் அப்படி நினைக்கவில்லை. பல செய்திகள் வெளியேறுகின்றன இல்லையா? அவிட்ட நாள் விழாவன்று யாத்திரீகர்கள் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான கலகக்காரர்கள் அகநகருக்குள் வந்திருக்க முடியாது அல்லவா?”

இவ்வாறு பேசிய மன்னனை எதிர்த்து மறுமொழி கூறும் துணிவு பூத பயங்கரப் படைத் தலைவனுக்கு இல்லை. அவன் பயந்து அடங்கி விட்டான். அந்தக் குழுவில் ஏனைய படைப் பிரிவுகளின் தலைவர்களும் பூத பயங்கரப் படையின் தலைவனுக்குப் பரிந்து கொண்டு வரவில்லை. எல்லாருமே அரசன் என்ன சொல்கிறான் என்பதையே பயபக்தியோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். உட்படுகருமத் தலைவர்களோ, அமைச்சர் பிரதானிகளோ கூட அதிகம் பேசவில்லை. அவர்களுடைய பேச்சு அதிகம் மதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். யாருடைய குரலாவது அரசனுடைய குரலை விட மேலெழுந்து வலிமையாக ஒலிக்க முடியுமென்றால், அது அங்கே அரசனுக்கு மிக அருகே அமர்ந்திருக்கும் அரச குருமாவலி முத்தரையருடையதாகத் தான் இருக்கும் என்பதை அவர்கள் அனைவருமே நன்கு உணர்ந்திருந்தனர். யார் எதைக் கூறினாலும், கலியரசன் இறுதியாக மாவலி முத்தரையர் சொல்படிதான் கேட்பான் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் மற்றவர்கள் நடுவே மாவலி முத்தரையருக்குக் ‘கலிய மன்னனின் சகுனி’ என்பது போல் ஒரு சிறப்புப் பெயரும் இரகசியமாக வழங்கி வந்தது. கலிய மன்னனின் சகுனியாகிய மாவலி முத்தரையர் அந்தச் சூழ்ச்சிக் கூட்டத்தில் என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்பதிலேயே அனைவரும் ஆவலாக இருந்தார்கள். கலிய மன்னனும் “நீங்கள்தான் வழி சொல்லவேண்டும், அடிகளே!” என்பதுபோல், இறுதியாக அவரைப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/238&oldid=946351" இலிருந்து மீள்விக்கப்பட்டது