பக்கம்:நித்திலவல்லி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

23


பேச நினைத்து முடிவில் தொடர்பில்லாமல் ஏதோ மூன்று வார்த்தைகளைச் சொன்னான்.

“நன்றாக இருட்டி விட்டது.”

“ஆமாம்! பாண்டிய நாட்டில் இருட்டிப்போய் நெடுங் காலமாகிறது தம்பீ!”

இந்த வாக்கியத்தின் பொருளாழம் அவனுக்குப் புரிந்தது.

“மன்னிக்க வேண்டும் ஐயா! பொழுது சாய்வதற்குள் தங்களைக் காண்பேன் என்று பாட்டனாரிடம் சொல்லி விட்டுவந்தேன்; இந்த இடத்துக்கு நான் வருவதற்குள்...”

“மிகவும் துன்பப்பட்டிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். எப்படி வரவேண்டும், என்னென்ன நல்லடையாளச் சொற்கள் பயன்படும் என்றெல்லாம் உன் பாட்டனாருக்கு நான் விவரமாகச் சொல்லியனுப்பியிருக்க முடியும். இவ்வளவு சிரமங்களையும் கடந்து நீ இங்கு வந்து சேர்கிற திறன் உடையவனா, இல்லையா என்று அறிவதற்காகவே நான் எதையும் சொல்லவில்லை.”

“பெரிய சோதனை இது!”

“சோதனைகள் அதிகம் எதிர்ப்படாத வாழ்வு வீரனுடைய வாழ்வாக இருக்க முடியாது.”

“தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியினால் தான் சோதனைகளைத் தாங்கும் வலிமை அடியேனுக்குக் கிடைக்க வேண்டும்.” கூறிக்கொண்டே பிறர் புரிந்துகொள்ள எந்த உணர்ச்சிகளும் தெரியாததும், பிறரைப் புரிந்துகொள்ள எல்லாச் சாதுரியங்களும் கருவிகளும், ஊடுருவுகிற பார்வைகளும், எதுவும் தப்பிவிடாமல் பிடித்திழுக்கும் கண்களும் அமைந்த அந்த விசாலமான முகத்தை நன்றாகப்பார்த்தான் இளையநம்பி. அளக்க முடியாத அளவும் பொருளும், கலக்க முடியாத நிலையும் தோற்றமும் உடைய ஒரு பெரிய மலையோ, கரை காணாத மகா சமுத்திரமோ எதிரே அமைந்திருப்பது போல் பிரமை தட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/24&oldid=714943" இலிருந்து மீள்விக்கப்பட்டது