பக்கம்:நித்திலவல்லி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3. மூல விருட்சம்

மாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு, கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும், இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும் படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:-

“இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கலாம் என்று கடிந்து கொண்டு, ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே; அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்பட வேண்டும்?”

“அது எப்படி முடியும்? மாவலி முத்தரையர் பாலியில்தான் பேசுகிறார். அரசரின் வலது கரம் போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.”

“இருக்கலாம்! ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”--

“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/243&oldid=946418" இலிருந்து மீள்விக்கப்பட்டது