பக்கம்:நித்திலவல்லி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

253


விடவில்லை. 'அந்தப் பேரழகி யார்? தான் எப்படி அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க நேர்ந்தது? தன் உடலைப் பிணித்திருந்த சங்கிலிகள் எங்கே?' என்பதெல்லாம் அலையலையாய் அவன் மனத்தில் வினாக்களாக எழுந்தன. அந்தப் பெண்ணின் செழுமையான உடற்கட்டு, அடர்ந்த புருவம், துறுதுறுவென்ற கண்கள், மறைக்காமல் அழகை உதறிக் காண்பிப்பன போன்ற அங்கங்கள், பெரிதாக முடிந்த அளகபாரம் யாவும் சேர்ந்து அவளைக் களப்பிரயினத்தினள் என்று அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தன. அவளுடைய செழுமையான வளை ஒலிக்கும் கைகளை விலக்கித் தள்ளி விட்டு, அவன் துள்ளி எழுந்திருந்தான். எழுந்த வேகத்தில் விலகி நின்று கொண்டு அவன் அவளை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்:-

“பெண்ணே, நீ யார்? சிறைக் கோட்டத்திலிருந்து நான் இங்கே எப்படி வந்தேன்? யாருடைய கட்டளையின் பேரில் நீ இந்தப் பணிவிடைகளை எல்லாம் இங்கு எனக்குச் செய்கிறாய்?”

இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்ட பின் முதலில் ஒரு கணம் வாயால் மறு மொழி எதுவும் கூறாமல் அவனை விழுங்கி விடுவது போல் பார்த்து நகைத்தாள் அவள். அந்தக் கண்களும், அந்தப் புன்னகையும், குருதி பூத்தது போன்ற அந்தச் செவ்விதழும், உறை நெகிழ்ந்த பொன் வீணை போன்ற அந்த உடலும், எதிர்ப்படுவோரை மயக்கி ஆட்படுத்துவதற்கென்றே படைக்கப்பட்டவை போலிருந்தன. அவனுடைய கேள்விகளுக்கு மறு மொழி கூறாததோடு தன்னுடைய வசீகரம் என்னும் மதுவினால், அவனுள் வெறியேற்ற முயன்று, அவன் மனத்தையே ஒரு கேள்வியாக வளைக்க முயன்றாள். அவள் விழிகளால், அவனுடைய உறுதியான உணர்வுகளைச் சுருட்ட முயன்று கொண்டே அழைப்பது போன்ற சிரிப்பும், சிரிப்பது போன்ற அழைப்புமாக நோக்கும் அவளை மீண்டும் அவனுடைய இடி முழக்கக் குரல் நினைவுலகிற்குக் கொணர்ந்தது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/252&oldid=946368" இலிருந்து மீள்விக்கப்பட்டது