பக்கம்:நித்திலவல்லி.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

255


அரசரோ, மற்றவர்களோ உன்னிடம் என்னை விட்டிருந்தார்களானால் அவர்களுக்காக நான் பரிதாபப்படவே செய்வேன்."

“வலிமையும், அழகும் உள்ள ஆண் மகன் பெண்ணிடம் அன்பு செய்ய வேண்டுமே தவிர, பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது.’’

“அன்பு என்பது தானாக நெகிழ்வது! அது வலிந்து யாரிடமும் செய்யப்படுவது அல்ல.”

மீண்டும் அந்தக் கொல்கின்ற காம விழிகள் அவனைச் சுருட்ட முயன்றன. அவன் அவளைப் பயமுறுத்தினான்:

“பெண்ணே! நான் மிகவும் பொல்லாதவன். முதலில் இதிலுள்ள சதி என்ன என்று என்னிடம் சொல்! இல்லா விட்டால் நீ என்னிடம் இருந்து உயிர் தப்ப முடியாது.”


5. ஒரு சாகஸம்

தென்னவன் மாறன் கூறியதைக் கேட்டு அந்த வேல் விழியாள் எந்த விதத்திலும் அஞ்சியதாகத் தெரியவில்லை. நிதானமாக அவள் அவனுக்கு மறுமொழி கூறினாள்:-

“யார் யாரிடமிருந்து உயிர் தப்ப முடியாது என்பது போகப் போகத் தெரியும்...”

“ஆண் புலியைப் பார்த்துப்பெட்டைப் பூனை சீறுகிறது”

“சிறைப்பட்டவர்கள் சிறைப்படுத்தியவர்களைப் பார்த்து உயிர் தப்ப முடியாது என்று பயமுறுத்தினால், சீறாமல் பின் சிரிக்கவா செய்வார்கள்?”

“வீரர்களைக் காமக் கிழத்தியர் தங்கள் தோள்களிலே சிறைப்படுத்தி விடலாம் என்று களப்பிரர்கள் நினைத்தால் அது பேதமை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/254&oldid=946420" இலிருந்து மீள்விக்கப்பட்டது