பக்கம்:நித்திலவல்லி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

259


புரிவதற்கே நான் வந்தேன். நீங்கள் என் மேல் கருணை காட்டவில்லை என்றாலும், நான் என் கடமை தவறியாவது, உங்கள் மேல் கருணை காட்டுகிறேன். உங்கள் மேல்-என்ன காரணமோ சொல்லத் தெரியவில்லை; என் மனம் பித்துப் பிடித்தது போல் அடிமைப் படத் தொடங்கி விட்டது” என்று கண்ணீரும், கம்பலையுமாக மன்றாடிய அவள் விழிகளில்-முகபாவத்தில் எந்த அளவு கபடம் இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கலானான் தென்னவன் மாறன். இப்படி அவள் ஒரேயடியாகச் சரணாகதி அடைவது போல் தன்னிடம் மன்றாடுவதும் கூட ஒரு சாகஸமோ என்று பயந்தான் அவன். ‘பஞ்சணையில் வேதாந்தம் பேசும் தமிழன்’ என்று தாபம் பொறுக்க முடியாமல் அழகுத் திமிரோடும், உணர்ச்சி வெறியோடும் தன்னை எடுத்தெறிந்து பேசியவளா, திடீரென்று இப்படித் தன்னுடைய அரண்களை எல்லாம் தானே சிதைத்துக் கொண்டு, எதிர்ப்பட்டுச் சரணாகதியாகிறாள் என்று நினைத்த போது நம்புவதற்கு அருமையாகவும் இருந்தது. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

இந்த இரண்டும் கெட்ட மனநிலையில் நாகரிகங்களை அதிகம் பழகாத அவனுடைய நாட்டுப்புறத்து மனப் பான்மை அவனைக் காப்பாற்றியது. அந்த நாட்டுப்புறத்துப் பிடிவாதம் அவனை அவளுக்கு முன் அந்த நிலையிலும், இளகி விடாமல் தடுத்தது. தன் மார்பில் பூத பயங்கரப் படைத் தலைவனின் வாள் இலேசாகக் கீறியிருந்த காயத்துக்கு அவள் கைகள்தான் மருந்திட்டிருக்க வேண்டும் என்று புரிந்ததும், மனத்துக்குள் அதற்காக நன்றியுணர்வு சுரந்தாலும் கூட அவளிடம் அதிகம் பேசவில்லை அவன்.

“உன்னுடைய கருணைக்கு நன்றி பெண்ணே! ஆனாலும் உன்னை நியமித்தவர்களுக்கு, நீ துரோகம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. காம மஞ்சரி! பெண்களின் உதவியோடு தப்பி ஒட நான் விரும்ப மாட்டேன் என்பது உனக்குப் புரிந்திருந்தால், நீ இப்படி என்னிடம் பேசியிருக்க மாட்டாய்!”

“இருக்கலாம்! ஆனால், இந்த இடத்தில் இப்போது என்னைத் தவிர, உங்களுக்கு வேறெவரும் உதவ மாட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/258&oldid=946375" இலிருந்து மீள்விக்கப்பட்டது