பக்கம்:நித்திலவல்லி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


முத்திரை உள்ள ஒருவனைப் பற்றி மிகவும் சந்தேகப்பட்டு முன்பொரு சமயம், சில ஆண்டுகளுக்கு முன் கழுவேற்றியிருக்கிறோம். எனக்கு அது இன்னும் மறந்து போய் விடவில்லை. இப்போது இவனையும் அப்படிக் கொன்று விடுவதன் மூலம் மிகப் பலவற்றை அறியவும், காணவும் நேரும் வாய்ப்புக்களை நாம் இழந்து விடுவோம்.”

“முயல்களுக்கு விரித்த வலையில், தெரிந்தோ தெரியாமலோ ஒரு வேங்கை சிக்கியிருக்கிறது என்கிறீர்! இல்லையா?”

“பொருத்தமான உவமையைச் சொல்கிறாய் அரசே! இவன் ஒரு வேங்கையேதான். உன்னுடைய சாகஸக் காரிகை காம மஞ்சரி இவனை மயக்கி இவனிடமிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்குப் பதில், அவளை இவன் மயக்கி அவளிடமிருந்து இவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை கலியா!”

“உங்கள் சந்தேகம் வீணானது! வில்லாலும், வாளாலும் வெல்ல முடியாதவர்களைப் பல முறை அவள் விழிப் பார்வையே வென்று தந்திருக்கிறது அரச குருவே!”

பேசிக் கொண்டே அவர்கள் பாலி மொழிப் புலவர்கள் கலிய மன்னனை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். புலவர்கள் எழுந்து நின்று, அரசனை வாழ்த்தி வரவேற்றனர். அரசன் களைத்து வந்திருப்பதை அறிந்து, அவன் மனக் குறிப்பு உணர்ந்த புலவர்கள் அவனை மகிழ்விக்கக் கருதினர். அரச குரு புலவர்களை எல்லாம் மிக மிக ஏளனமாகவும் அலட்சியமாகவும் ஏறிட்டுப் பார்த்தார். அரச குருவின் செல்வாக்கை அறிந்த புலவர்கள் அவரையும் வாய் நிறைய வாழ்த்தினர். அரச குரு மாவலி முத்திரையர் உள்ளுற நகைத்துக் கொண்டார். இந்தப் புலவர்களில் பலர் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அரசன் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக இல்லாததையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/261&oldid=946380" இலிருந்து மீள்விக்கப்பட்டது