பக்கம்:நித்திலவல்லி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


‘மெய்யாகவே வளைகள் அப்படிக் கழன்று குவியாது! இதெல்லாம் ஒரு வகைக் கற்பனை அதிசயோக்தி. உயர்வு நவிற்சி என்பார்கள் உங்கள் தமிழில்.”

“நீங்கள் எல்லாம் இப்படியே கற்பனையைப் புனைந்து தள்ளிக் கொண்டிருந்தீர்களானால் இந்தக் களப்பிரப் பேரரசின் வீரம் கூட ஒரு நாள் கற்பனையாகப் போய் விடும்.”

எந்த ஒரு மகிழ்ச்சியை எதிர் பார்த்து அரச குரு தம்முடைய குரூரமான இயல்பை விடுத்துச் சிரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதைக் கலியன் சிந்தித்தான். அரச குருவுக்குப் பயந்தபடியே இரண்டாவது புலவர், கலிய மன்னன் நான்மாடக் கூடல் வீதியில் உலாப் போகும் போது, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் மயக்கமுற்று மையலானதைப் பற்றிய உலாக் கவிதையைப் பாடலானார்:-

“இந்த ஏழு பருவ மகளிரும் பல நூறு ஆண்டுகளாக அரசர்கள் தெருவில் வரும்போது மட்டும்தான் மையல் கொள்ளுகின்றார்கள்! இந்த மதுரை மாநகரம் பாண்டியப் பேரரசின் தலைநகராக இருந்த போது, பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர்களும் இப்படித்தான் ஒரு பாவமும் அறியாத ஏழு பருவ மகளிரை வம்புக்கு இழுத்துப் பாடியிருப்பார்கள். இன்று நம் கலிய மன்னன் உலாப் போகும் போதும் இந்த ஏழு பருவ மகளிர்தான் மையல் கொள்கிறார்கள். நாளைக் கலிய மன்னனின் மகன் உலாச் சென்றாலும் இவர்கள்தான் மயங்க வேண்டும் இவர்களுக்கும் உங்களுக்கும், வேறு வேலையே இல்லையா?” என்று இரண்டாவது புலவரையும் ஏளனம் செய்தார் அரச குரு. ஒரு நிலைமைக்கு மேல் அவர் தன்னையே ஏளனம் செய்கிறாரே என்றுகூட அரசன் உள்ளுற உணரத் தலைப்பட்டான்.

அங்கு அப்போது யாருமே எதிர்பாராத விதமாகக் காம மஞ்சரி மான் நடந்து வருவது போல் அன்னநடை பயின்று, கொலு மண்டபத்திற்குள் வந்தாள். உடனே அரசனும் மாவலி முத்தரையரும் பரபரப்படைந்தனர். அவளைப் பின் தொடர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/263&oldid=946382" இலிருந்து மீள்விக்கப்பட்டது