பக்கம்:நித்திலவல்லி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


“பெண் சபலங்களின் வடிவம் என்பதை நீயும் நிரூபித்து விட்டாய் காம மஞ்சரி! தன்னுடைய சபலங்களையே அடக்கி வெற்றி கொள்ள முடியாதவளால் பிறரை வெற்றி கொள்ள முடியாதுதான்.”

“இதில் சபலங்களைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை ஐயா! நீங்கள் வீணாக என் மேல் பழி சுமத்துகிறீர்கள். நானும் என்னால் முடிந்த வரை முயன்றுதான் பார்த்தேன். எதிராளி உணர்ச்சிகளால் வெல்ல முடியாதவனாக இருக்கும் போது நான் எத்தகைய சாகலம் புரிந்தாலும் பயனில்லை”, என்று காமமஞ்சரி கூறிய வார்த்தைகளையும் மாவலி முத்தரையர் ஏற்கவில்லை. அவர் கூறினார்:

“மயக்க வேண்டியவளாகிய நீயே மயங்கியிருப்பாய். அதனால்தான் உன்னால் காரியத்தைச் சாதிக்க முடியவில்லை! பெண்களிடமுள்ள தவிர்க்க முடியாத நோய் இது. அழகிய ஆண் பிள்ளைகளிடம் ஒற்றறிய இவர்களை நம்பி அனுப்பினால், அந்த ஆண் பிள்ளைகளிடம் இவர்களே வயமிழந்து மயங்கிப் போகிறார்கள்.”

காம மஞ்சரி இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளருகே நின்றுகொண்டிருந்த பூத பயங்கரப் படைத் தலைவன், அரசரின் கோபமோ, மாவலி முத்தரையரின் கோபமோ, தன் மேலேயே திரும்பி விடக் கூடாதே என்ற கவலையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அரசருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தான்.

“ஐயா! அந்தப் புலித்தோல் அங்கி அணிந்த இளைஞனை மறுபடியும் சிறையில் அடைத்து விட்டேன்”, என்று மாவலி முத்தரையரை நோக்கிச் சொன்னான் அவன். மாவலி முத்தரையரோ, கலிய மன்னனோ அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சொற்களைக் காதில் வாங்கியதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. காம மஞ்சரியால் ஒற்றறிய முடியாமற் போய் விட்டது என்பதே அவர்களுடைய வருத்தமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/265&oldid=946384" இலிருந்து மீள்விக்கப்பட்டது