பக்கம்:நித்திலவல்லி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

267



“நீ போகலாம்! இனிமேல் இப்படிக் காரியங்களில் உன்னையும் நம்ப முடியாது", என்று கலிய மன்னன் கூறிய போது காம மஞ்சரி அந்தக் குரலில் வேற்றுமை கண்டாள். வழக்கமாக இப்படிக் காரியங்களின் முடிவில் பொன் ஆரமும், முத்தும், மணியும், இரத்தினமும் வைத்துப் பரிசு கொடுக்கும் அரசன், இன்று தன்னை வெறும் கையளாக அனுப்புவதோடு மட்டுமின்றிச் சந்தேகத்துக்கு உரியவளாகவும் கருதுவதைப் புரிந்து கொண்டாள். அவளுள்ளே பெண்மை சீறியது. பதினாறடி வேங்கை போன்ற அந்தப் பாண்டியகுல வாலிபனை வெற்றி கொள்ள முடியாத ஏமாற்றத்தால், ஏற்கெனவே துடித்துக் கொண்டிருந்த அவள் மனத்தை அரசனும், மாவலி முத்தரையரும் இப்போது இன்னும் அதிகமாகச் சோதனை செய்திருந்தனர்.

‘அவனிடமிருந்து நான் தப்புவதற்காக அவனைத் தப்ப விடுவது போல் பேசினேன்’ என்று தான் கூறியதை அரசன் இரசிக்கவில்லை என்று அவளுக்கே புரிந்தது. அந்த வார்த்தைகளைக் கூறிய போதுதான் கலிய மன்னனுக்குத் தன் மேல் கடுமையான சந்தேகம் மூண்டது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். அரசனும், மாவலி முத்தரையரும் நடந்து கொண்டதிலிருந்து அவள் மனம் விரக்தியின் எல்லைக்குப் போயிருந்தது. முறைகளையும், சம்பிரதாயங்களையும் துறந்து அரசனிடமோ, மாவலி முத்தரையரிடமோ சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறினாள் அவள்.

அங்கிருந்து அவள் வெளியேறும்போது அரச குருவோ கலிய மன்னனோ அவளைப் பொருட்படுத்தவில்லை. கலிய மன்னன் கொலு மண்டபத்துப் புலவர்களின் புகழ்ச்சியிலே மீண்டும் குளிர் காயப் போய்விட்டான். மாவலி முத்தரையரோ மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதற்கு அடுத்த உபாயமாக எதை மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார்.

அடிபட்ட பெண் புலியின் சீற்றத்தோடு திரும்பிக் கொண்டிருந்த காம மஞ்சரி போகிற போக்கில் களப்பிரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/266&oldid=946385" இலிருந்து மீள்விக்கப்பட்டது