பக்கம்:நித்திலவல்லி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நித்திலவல்லி / முதல் பாகம்


புறநகரிலும் பூதபயங்கரப் படையினர் மாறுவேடத்தில் திரிகிறார்கள். எந்த வழியாகவும் நீ அகநகரில்கோட்டைக்குள் நுழைவது என்பது பெரு முயற்சியாகத்தான் இருக்கும்.”

“ஐயா! நாளைக்கு வைகறை வேளையில் நான் கோட்டைக்குள் போவது ஓரளவு சுலபமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். விடிந்தால் மதுரையில் அவிட்ட நாள் பெரு விழா. தலைநகரம் கோலாகலமாகவும், மக்கள் கூட்டம் நிரம்பியும் இருக்கும். பாதுகாப்பு விதிகள் அவ்வளவு கடுமையாக இருப்பது திருவிழாக் காலங்களில் சாத்திய மில்லை. இருந்த வளமுடையாரையும், அந்தர வானத்து எம் பெருமானையும் தொழுவதற்காகப் பாண்டி நாட்டின் பல்வேறு திசையிலிருந்தும் மக்கள் கூடும் நாளில் அடியேனும் அந்நகருக்குள் போவது சுலபமாயிருக்கும் என்றே தோன்றுகிறது.”

“இளையநம்பி! நீ நினைப்பது தவறான அநுமானம். நம்முடைய திருவிழாக்களை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாட விடுவதற்குக் களப்பிரர்கள் மனம் ஒப்ப மாட்டார்கள். இந்தப் பேய்கள் விரட்டப்படுகிறவரை பாண்டியர் தலைநகரில் உன்னுடைய முன்னோர்களின் புகழ்பெற்ற திருவிழாக்கள் கிடையாது.”

வாளின் நுனிபோல் கூரியதாயிருந்த அவரது நாசியையும், அழுத்தமான பெரிய உதடுகளையும், அதனிடையே வெளேரென்று ஒளிவீசும் பற்களையும், சிவந்த முக மண்டலத்தையும் ஏறிட்டுப் பார்த்து அவர் கூறியதை மறுக்கத் துணிவின்றி நின்றான் இளையநம்பி. அதன் பின் நீண்ட நேரம் களப்பிரர் ஆட்சி சில தலைமுறைகளில் செய்துவிட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக அவனுக்கு விளக்கிச்சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அவற்றைக் கேட்கக் கேட்க அந்த இளம் வீரனின் தோள்கள் தினவு எடுத்து விம்மின. இரத்தம் கொதித்தது.

“தம்பி! இரவு நெடுநேரமாகி விட்டது! உன்னுடைய தோட் கோப்பிலிருந்து திருக்கானப்பேர்க் கட்டுச்சோறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/27&oldid=714973" இலிருந்து மீள்விக்கப்பட்டது