பக்கம்:நித்திலவல்லி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

271


கோட்டத்துக்கு வழியும் கூறி விட்டுச் சென்றாள். அவளுடைய விரக்தி அவர்களுக்கு இந்த நன்மையைச் செய்தது.


8. குறளியும் மாற்றுக் குறளியும்

ரண்மனையிலும், கோட்டையின் மற்ற உட்பகுதிகளிலும் நள்ளிரவின் அமைதி சூழ்ந்தது. காவலிருக்கும் வீரர்கள் தாங்கள் விழித்திருக்கிறோம் என்பதை அறிவிக்க, ஒருவருக்கொருவர் கேட்கும்படி உரத்துக் கூவும் எச்சரிக்கைக் குரல்கள் தான் இடையிடையே அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தன. அந்தக் குரல்கள் ஒலிக்காத வேளையில், எங்கும் இருளின் மிகுதியை எடுத்துக் காட்டுவது போல் நிசப்தமே சூழ்ந்திருந்தது. எப்போதாவது அகழி நீரில், ஒரு பெரிய முதலை வாலைச் சுழற்றி அடிக்கும் ஓசை, கோட்டை மதில்களின் சுவர்களில் எதிரொலித்தது. மதில் மேல் காவலுக்கு நிற்போரின் உருவம், நிழல் போல் இருண்டு தெரிந்தது. அன்று அந்த நள்ளிரவு வேளையில் பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைப்படி, களப்பிரர்களிடம் சிறைப்பட்டு விட்ட தென்னவன் மாறனையும், பிறரையும் சிறை மீட்கும் முயற்சியில் அழகன் பெருமாளும் நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவுக்குச் சிறிது நேரம் கழித்து அவர்கள் அறுவரும் சிறைக் கோட்டப் பகுதியை அடைந்து விட்டனர்.

சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலில் நாலைந்து முரட்டுக் களப்பிரர்கள் காவல் இருந்தனர். அவர்களோடு போரிட்டுக் கொன்று விட்டு உள்ளே நுழையலாமா, அல்லது தந்திரமாக ஏதாவது செய்து, அவர்களை ஏமாற்றி விட்டு உள்ளே நுழையலாமா என்று அவர்கள் தயங்கிக் கொண்டிருந்தபோது, தேனூர் மாந்திரீகன் அந்தத் தயக்கத்தைத் தீர்த்து வைத்தான். அவன் கூறினான்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/270&oldid=946423" இலிருந்து மீள்விக்கப்பட்டது