பக்கம்:நித்திலவல்லி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


சில கணங்களாகப் பதறுகிறது. நிச்சயமாக இங்கே ஒரு மாற்று ஏவலாளன் இருப்பான் என்றே நான் ஐயுறுகிறேன்.”

இப்படிப் பேசிக் கொண்டே அவர்கள் சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலருகே வந்திருந்தனர். பிரதான வாயில் அடைத்திருந்ததைக் கண்டு அழகன் பெருமாள் திகைத்தான். மதிற் சுவர் எரிவது போல் தெரியவில்லை. தரையில் சர்ப்பங்கள் தென்படவில்லை. வெளிப்புறம் அடைக்கப்பட்ட கதவுகளின் அருகே முன்பு எத்தனை களப்பிர வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ, அத்தனை பேர் இப்போதும் அமைதியாகக் காத்திருந்தனர். தப்பி ஓடுவதற்கு இருந்த அழகன் பெருமாள் முதலிய பத்துப் பேரும் அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே இருந்து திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உள்ளே வரும் போது கூட அடைக்கப்பட்டிராத கதவுகள் இப்போது ஏன் அடைக்கப் பட்டிருக்கின்றன என்பது புரியாமல் அவர்கள் மருண்டனர்.

அழகன் பெருமாள் வினாவுகின்ற பாவனையில் தேனூர் மாந்திரீகனின் முகத்தைப் பார்த்தான். மாந்திரீகனின் முகம் கலவரமுற்றிருந்தது. அவன் பதறிய குரலில் பதில் சொன்னான்:

“நான் பயந்தபடியே நடந்திருக்கிறது.”

“அப்படி என்ன நடந்திருக்கிறது செங்கணான்?”

“யாரோ மாற்று ஏவல் செய்திருக்கிறார்கள் இதோ நான் மீண்டும் சர்ப்பங்களையும், நெருப்பையும் ஏவுகிறேன். பலிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாமே?” என்று கூறி விட்டுக் கண்களை மூடித் தியானித்து ஏதோ முணுமுணுத்தான் தேனுர் மாந்திரீகன் செங்கணான்.

ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. தரையில் பாம்புகள் தோன்றவில்லை. சுவரில் தீப்பிடிக்கவில்லை. சில கணங்களுக்குப் பின், தேனூர் மாந்திரீகன் செங்கணான் வாளாவிருக்கும் போதே அவர்கள் எதிரில் திடீரென நரிகளும், ஒநாய்களும் தோன்றிக் கோரமாக வாய்களைப் பிளந்து கொண்டு ஊளையிடலாயின.தேனுாரான் தளர்ந்த குரலில் கூறலானான்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/273&oldid=946393" இலிருந்து மீள்விக்கப்பட்டது