பக்கம்:நித்திலவல்லி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


என்று இரத்தின மாலை அருகிலிருக்கும் போதே அவளைப் பொருட்படுத்தாதவன் போல், அதே சமயம் அவள் காது கேட்கப் பணி மகளை யாழ் வாசிக்கச் சொல்லிக் கட்டளையிட்டான். அவன் எதிர்பார்த்தபடியே நாச்சியார் இரத்தின மாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துத் தயங்கினாள். தலைவியின் முன்னிலையில், தான் யாழ் வாசிப்பது எப்படி என்று அவள் பயந்து கூசுவதாகத் தோன்றியது. அவனோ மீண்டும் அவளை வற்புறுத்தினான்

“நீ வாசித்தால்தான் என் மனம் மகிழும் நாச்சியார்!”

நாச்சியாரின் முகத்தில் நாணமும், பயமும் மாறி மாறிப் பிரதிபலித்தன. அவள் இதழ்களில் வெளிப்பட முயன்ற நகை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தலைவிக்கு அஞ்சி மறைந்து ஒளிந்தது. மீண்டும் அவன் குழைந்த குரலில் நாச்சியாரை இறைஞ்சிய போது, அங்கே அவனிடம் நேரில் பேசாமல், ஆனால் அவன் கேட்கும்படி நாச்சியாரிடம் பேசுவது போல்,

“இந்த மாளிகைப் பெண்கள் தலைவிக்குக் கட்டுப்பட்டவர்கள். நம்பிக்கை மாறாதவர்கள். நன்றியுடையவர்கள் என்பதை நீ உன் மறுப்பால், உன்னை வேண்டுபவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் நாச்சியார்!”, என்றாள் இரத்தின மாலை. இளையநம்பியும் பதிலுக்குப் பணிப் பெண்ணிடம் பேசுவது போலவே கேட்டான்:

“விருந்தினர்களைப் பணிப் பெண்களிடம் அவமானம் அடையச் செய்வதுதான் இந்த மாளிகை வழக்கமா என்று அங்கே கேள் நாச்சியார்?”

“பணிப் பெண்களின் தலைவியை, அந்தப் பணிப் பெண்களுக்கு முன்பே அவமானப்படுத்த விரும்பும் எந்த விருந்தினரையும் நாங்கள் இங்கே மதிக்க முடியாது” என்று கோபம் தாங்க முடியாமல் நேரே அவனிடமே பேசி விட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/279&oldid=946400" இலிருந்து மீள்விக்கப்பட்டது