பக்கம்:நித்திலவல்லி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

27


மணக்கிறது. திருக்கானப்பேரில் தயிர் அமிர்தமாக இருக்கும். நெடுங்காலத்திற்கு முன் உன் பாட்டனார் விழுப்பரையரோடு விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போது நீ உண்டு முடித்த பின் அங்கேயே உறங்கலாம். நீ மதுரைமாநகருக்குப் போவது பற்றி நாளை விவரம் சொல்லுகிறேன்.”

“ஐயா! திருக்கானப்பேர்த் தயிரை இவ்வளவு புகழும் நீங்களும் இந்தக் கட்டுச் சோற்றை என்னோடு பகுத்துண்ணலாம் அல்லவா?’’

‘'நானா? இரவில் உண்பதை நான் நிறுத்திப் பல ஆண்டுகள் ஆயிற்றுத் தம்பி! பகலில்கூட நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை.”

“தாங்கள் கூறுவது விளங்கவில்லையே?”

“போகப் போகத்தானே விளங்கிக்கொள்வாய்? இப்போது நீ உண்ணலாம். அந்த மூலையில் மண் கலத்தில் பருக நீர் இருக்கிறது. உண்டு முடித்ததும் இதோ இந்தப் பட்டைக் கல்லில் படுத்து உறங்கு. வழிப்பயணக் களைப் போடு உறக்கத்தையும் கெடுத்துக் கொள்ளாதே. எனக்கு இரவில் சிறிது தொலைவு காலார நடக்கும் வழக்கம் உண்டு. நான் திரும்பி வர இரண்டு நாழிகை ஆகலாம். அதுவரை எனக்காக நீ விழித்திருக்க வேண்டும் என்பதில்லை” என்று கூறிவிட்டு வெளியேறுவதற்காக எழுந்து நின்றார் மதுராபதி வித்தகர். அந்தத் தோற்றத்தின் உயரம் திடீரென்று தன்னைச் சிறியவனாக்கி விட்டது போல் உணர்ந்தான் இளையநம்பி. சாமுத்ரிகா லட்சணங்கள் எல்லாம் அமைந்த ஒரு யவன வீரனைத் தமிழ்நாட்டுக் கோலத்தில் மூப்போடு பார்த்தது போலிருந்தது அவர் நின்ற காட்சி. சிங்கம் பார்ப்பதுபோல் நேர் எதிரே நிலைக்கும் அந்தப் பெரிய கண்கள், அவர் அங்கிருந்து வெளியேறிய பின்பும் தன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. எதிராளியின் நினைவில் ஓர் எச்சரிக்கைபோல் பதியும் அந்தக் கண்களைப் பற்றியே நினைத்து வியந்து கொண்டிருந்தான் இளையநம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/28&oldid=714981" இலிருந்து மீள்விக்கப்பட்டது