பக்கம்:நித்திலவல்லி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


10. திருமால் குன்றம்

ரத்தின மாலைக்கும், இளைய நம்பிக்கும் பிணக்கு ஏற்பட்டுத் தவிர்ந்த தினத்திற்கு, முந்திய நள்ளிரவிலேயே அங்கிருந்து புறப்பட்டிருந்த திருமோகூர்க் கொல்லன், பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக விரைந்து கொண்டிருந்தான். கணிகை இரத்தின மாலையின் மாளிகையிலிருந்து புறப்பட்டு, நிலவறை வழியே உப வனத்தை அடைந்து, இரவோடிரவாக வைகையை நீந்திக் கடந்து, புறநகரில் போய், அங்கிருந்து திருமோகூர் செல்லும் சாலையை நாடாமல், நேர் வடதிசையில் திருமாலிருங் குன்றத்தை நோக்கி விரைந்தான் கொல்லன். நடு வழியில் எங்காவது களப்பிரப் பூத பயங்கரப் படையினரிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதே, என்ற பாதுகாப்பு உணர்வினால், சில இடங்களில் காடுகளிலும், புதர்களிலும் வழி விலகி நடந்தான் அவன். திருமால் குன்றத்து இறைவனை வேண்டிக் கொண்டே வழியைக் கடந்து, கிழக்கு வெளுக்கும் நேரத்திற்கு முன்பாகவே மலையடிவாரத்தை அடைந்து விட்டான் அவன். எழில் குலவும் அந்த மலையடிவாரத்தில், கலின் கலின் என்று சிலம்புகள் குலுங்க ஒர் அழகி பாதம் பெயர்த்து நடப்பது போல் பாயும் சிலம்பாற்றின் கரையில் நின்று, சூரியோதயத்தைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. பறவைகளின் வித விதமான ஒலிக் கலவைகளும், வைகறையின் தண்மையும், மலைச் சாரலின் பசுமையும், பசுமையின் கதம்பமான வாசனைகளும், அவனுடைய வழி நடைக் களைப்பைப் போக்கின. உடலுக்கு நன்மை செய்ய வல்ல பல வகை வேர்களிலும், மூலிகைகளிலும் ஊறி வரும் பட்டுப் போல் மென்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/281&oldid=946425" இலிருந்து மீள்விக்கப்பட்டது