பக்கம்:நித்திலவல்லி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

291



இந்த நிலையில் மேலும் தொடர்ந்து பொய்யே சொல்லுவதா, அல்லது என்ன செய்வது என்று அந்தத் தூதனையே குழப்பும், அடுத்த வினாவைக் கேட்கலானாள் அவள்:

“கோநகரத்தில் யாரோடு எங்கே தங்கியிருக்கிறார் அவர்? உடனிருப்பவர்கள் அவருக்கு ஒரு குறைவும் வராமல் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா?”

இந்தக் கேள்விக்கு அவன் உடனே மறுமொழி கூறி விடவில்லை. சற்றே சிரித்தான்; தயங்கினான். பெண்களின் நளினமான உணர்வுகளைப் பற்றியும் பொறாமை, புகைதல்களைப் பற்றியும் அவனுக்கு அதிக அனுபவ ஞானம் இல்லை என்றாலும், பொதுவான உலகியல் ஞானம் இருந்தது. இரும்பை உருக்கியும், வளைத்தும், நீட்டியும், காய்ச்சியும், அடித்தும் பழகிய கைகளில் தங்கம் வந்தது போல் மிருதுவானதும் இங்கிதமானதும் ஆகிய ஒரு வினா இப்படி வந்து சேர்ந்திருக்கிறது. கரும் பொன்னாகிய இரும்பிற் பழகுகிறவனிடம் அரும் பொன்னாகிய தங்கம் வந்திருக்கிறது. அதன் பணி வகைகளை அறியவும், தெரியவும் தயங்கினாலும் இது தங்கம் என்பதையும், இதை இங்கிதமாக அணுக வேண்டும் என்பதையும், ஒரு விநாடி கூட அயராமல், உடனே நிர்ணயம் செய்து கொண்டான் அவன். இளையநம்பி கூடல் மாநகரில் கணிகை மாளிகையில் தங்கியிருப்பதையும், ஆடல் பாடல்களில் வல்லவளும் அதியற்புதப் பேரழகியுமான இரத்தின மாலை என்ற இளம் கணிகை அவனோடு உடன் இருந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும், அப்படி, அப்படியே செல்வப்பூங்கோதையிடம் கூறினால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அவனால் உய்த்துணர முடிந்தது. இவற்றையெல்லாம் எண்ணி மிகவும் சாதுரியமாகச் செல்வப் பூங்கோதைக்கு மறுமொழி கூறலானான் அவன்:-

“அம்மா! இந்தக் காராளர் பெருமாளிகையில், தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால், அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/290&oldid=946451" இலிருந்து மீள்விக்கப்பட்டது