பக்கம்:நித்திலவல்லி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

299


சந்தித்து அழைத்து வர வேண்டும் என்று பெரியவர் தன்னை விரட்டியிருந்தாரோ அந்தப் பிள்ளையாண்டான் இவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கொல்லன் சுலபமாகப் புரிந்து கொண்டான். பேதைப் பருவத்துப் பெண்களைப் ‘பெட்டைப் பயல்கள்’ என்று கூறும் சொல் வழக்குப் பாண்டிய நாட்டின் எல்லையிலேயே கொற்கையிலும், கொற்கையைச் சூழ இருந்த[1] மாறோக வளநாட்டுப் பகுதியிலும்தான் உண்டு என்று கொல்லன் கேள்விப்பட்டிருந்தான். இவன் கொற்கை சூழ்ந்த மாறோக வளநாட்டைச் சேர்ந்தவனே என்பதை அந்தப் பதப் பிரயோகமே நிரூபித்து விட்டது. ஆயினும் கொல்லன் இன்னும் அவனைப் பெயர் சொல்லிப் ‘பெருஞ்சித்திரன்’ என அழைக்கவில்லை. வன்னி மரத்தடி வருகிற வரை வழி காட்டுகிறவனைப் போலவே கொல்லன் நடித்தான். அந்த விடலைப் பிள்ளையாண்டானோ, 'இவன் தான் நாம் சந்தித்து ஒன்பது முத்துகளைத் தந்து, உறவு கொண்டு பழக வேண்டியவன்’ என்ற சிறு அனுமானம் கூட இல்லாமல் வன்னி மரத்தடி வந்ததும் பட்டு நூலிழை போன்ற தனது அந்த இனிய குரலில்,

“ஐயா எனக்கு வழி காட்டியதற்கு மிக்க நன்றி. இனி நீங்கள் போகலாம்” என்பது போல் கொல்லனுக்கு விடை கொடுத்து அனுப்ப ஆயத்தமானான். இதைக் கேட்டுக் கொல்லன் உள்ளுறச் சிரித்துக் கொண்டான். அவன் விடை கொடுத்த பின்பும் போகாமல் தயங்கி நின்ற கொல்லனை, ‘என்னடா, இவனைப் போகச் சொல்லியும் விடாமல் இன்னும் தயங்கி நிற்கிறானே’ - என்று நினைத்துப் பொறுமை இழந்து போய் நோக்கினான் இளைஞன்.

அதற்கு மேலும் தனக்கு வழி காட்டியவனை அங்கிருந்து போகச் சொல்லி வற்புறுத்த, அந்த வெளியூர் இளைஞன் தயங்கியிருக்க வேண்டும். பொது இடமாகிய கொற்றவைக் கோயிலை விட்டு, மற்றொரு மனிதனை வெளியே துரத்தத்


  1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் 164-ம் சூத்திர உரை - சேனாவரையர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/298&oldid=946505" இலிருந்து மீள்விக்கப்பட்டது