பக்கம்:நித்திலவல்லி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29


அவருடைய கழுத்திலும் தோள்களிலும் முழங்கால்களிலும் கன்னங்கரிய நாகசர்ப்பங்கள் நெளிந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த புற்றின் துவாரங்களிலே மேலும் சில சர்ப்பங்கள் இருள் வழிவது போன்ற நிறத்தில் நெளிந்து கொண்டிருந்தன. கொடிய நஞ்சு அடங்கியது என்று கருதப்படும் காஞ்சிரங்காய் ஒன்றைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார் அவர்.

எரிகின்ற தழல் போன்ற திறத்தைக் கொண்டிருந்த மேனியில் கரிய சர்ப்பங்களையும் சேர்த்துப் பார்த்தபோது ஓர் அசைப்பில் முதல் நாள் தோன்றியது போலவே ஆலமர் கடவுளின் கோலம் இளைய நம்பியின் கண்களுக்குத் தெரிந்தது. காலங்கள் செய்யும் மூப்புக்களை வென்று காலங்களையே மூப்படையச் செய்யும் வைரம் பாய்ந்த அந்த மேனியின் இரகசியம் அவனுக்கு இப்போது ஒரளவு புரிந்தது.

பாட்டனார் சொல்லியிருந்த பெரியவரின் வயதிலிருந்து அவர் மூத்துத் தளர்ந்து போயிருக்கக்கூடும் என்று திரு மோகூரில் நுழைந்த வேளையில் தனக்குத் தானே செய்து கொண்ட அநுமானம் எவ்வளவு பிழையானது என்பதை இப்போது இளைய நம்பி உணர்ந்தான். அந்த உடலில் மூப்பின் சாயல் தெரிந்தது; ஆனால் தளர்ச்சியின் சாயல் கூடத் தெரியவில்லை.

“ஐயா! ‘சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ -என்று நம்முடைய செந்நாப்போதர் கூறியருளியிருக்கும் குறளுக்கு இப்போது அடியேனுக்கு நன்றாகப் பொருள் புரிகிறது. இத்தனை மூப்பிலும் தங்கள் திருமேனி பொன் தழலாக மின்னுவது பெரிய சித்தி ஐயா!”

“என்னுடைய மூப்பைப் பற்றி நினைக்க எனக்கு நேரமில்லை தம்பி! புகழ்கிறவர்கள்தான் எனக்கு அதை நினைவூட்டவே செய்கிறார்கள். நான் ஏன் இப்படி விநோதமான வழக்கங்களை உடையவனாக இருக்கிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/30&oldid=714998" இலிருந்து மீள்விக்கப்பட்டது