பக்கம்:நித்திலவல்லி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


முடியாது! உங்களுக்குத் தெரியுமா, அவலை விக்கியே பலர் செத்துப் போயிருக்கிறார்கள். ஆனாலும் வழிப் பயணத்தில் கெடாத உணவு அவல்தான். அதனால் இந்த அவலையும், பொரிவிளங்காயையும் விட்டுத் தொலைக்கவும் முடியவில்லை.”

“செத்துப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே உண்பதும், பருகுவதும் எனக்குப் பிடிக்காது! வாழ்வதைப் பற்றிய அக்கறையுடனும், பிரியத்துடனும் உண்ண வேண்டும், பருக வேண்டும், தின்ன வேண்டும். ஐயா! சாகிறவர்கள் அவல் விக்கித்தான் சாக வேண்டும் என்பதில்லை... உண்பதற்கு அவல் கூடக் கிடைக்காததாலும் சாக முடியும்” என்றான் கொல்லன்.

இதற்கு இளைஞன் பதில் ஒன்றும் கூறவில்லை. கல் உருண்டைகளைப் போல் இருக்கிற இரண்டு பொரி விளங்காய்களை எடுத்துக் கொல்லனிடம் நீட்டினான் அவன். கொல்லனும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

வாயில் இட்டுப் பல்லால் கடிக்க முயன்று தோற்றபின், கொல்லன் அந்தப் பொரிவிளங்காயை எடுத்துப் பாறை மேல் அடித்து உடைக்கலானான். அப்படியும் அது உடையவில்லை. கொல்லன் சிரித்தான்.

“ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்? பொரிவிளங்காய் உங்களுக்குப் பிடிக்காதா?”

“பிடிக்குமா, பிடிக்காதா என்பதை விட உடையுமா, உடைக்குமா என்பதுதான் இப்போது பொருத்தமான கேள்வியாக இருக்கும் போலிருக்கிறது. இந்தப் பொரி விளங்காயை வைத்து மதுரைக் கோட்டையையே கூட உடைத்துக் களப்பிரர்களை ஒடச் செய்து விடலாம்...”

அவன் இதைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். பின்பு சொன்னான்: -

“வாயில் சிறிது நேரம் ஊறினால், அப்புறம் தானே உடைந்து விடும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/301&oldid=946515" இலிருந்து மீள்விக்கப்பட்டது