பக்கம்:நித்திலவல்லி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கொல்லனுக்கே புரிந்தது. திருமால் குன்றத்திலிருந்து மதுரைக்கும், திருமோகூருக்கும், திருமோகூரிலிருந்து மறுபடி திருமால் குன்றத்துக்கும் என்பதாகக் கடந்த சில தினங்களாய் இடைவிடாமல் அலைந்ததனால், இரும்புத்தசைகள் எனத் திரண்டிருந்த கொல்லனின் முழங்கால் கூட வலித்தன. 'தன் பணிகளையும், தான் ஒடும் ஒட்டங்களையும், பெண்ணின் நளினங்களைக் கொண்ட அந்த இளம் ஆண் பிள்ளையால் ஒரு நாள் போதாவது தாங்க முடியுமா?' என்று நினைத்துப் பார்த்தான் கொல்லன். இப்படி எண்ணியவாறே அந்த இளைஞனும் உடன் வரக் குறுகலான காட்டு வழியே நடந்து கொண்டிருந்த போது, ஒரிடத்தில் எதையோ பார்த்து விட்டுப் பயந்து அலறிப் பின் வாங்கினான் இளைஞன்.

அவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தால், காட்டு மரங்கள் எரியும் தீ வெளிச்சத்தில் தேர் வடம் போன்ற பூதாகரமான மலைப்பாம்பு ஒன்று, காட்டு எலியைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது.

இளைஞன் பயந்தாங்கொள்ளியாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், பேதைத் தன்மை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கொல்லன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரிந்து கொண்டான். திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி, தென்னவன் சிறுமலை வேங்கைப்புலி மாறன் ஆகிய தீரர்களோடு இணையாக இவனை நினைத்துப் பார்க்கவும் கூட முடியாமலிருந்தது.

“மலைப்பாம்பு எலியை விழுங்குகிறது! அதில் நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை. பேசாமல் என்னோடு நடந்து வர வேண்டும் நீங்கள். உங்களுக்கு எந்த அபாயமும் வராது”, என்று தைரியம் கூறி, அந்த இளைஞனை மேலே வழி நடத்திச் சென்றான் கொல்லன். ஒரு நிலைமைக்கு மேல் கொல்லனுக்குக் கோபமே கூட வந்து விட்டது. நல்லடையாளச் சொல் வெளியாகி விட்ட கவலை, களப்பிரர்களின் கொடுமை, இவற்றைப் பற்றிய தீவிரமான சிந்தனைகளுக்கு நடுவே வெறும் பிள்ளைக் கதைகளையும் பெருஞ் சிரிப்பையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/303&oldid=946519" இலிருந்து மீள்விக்கப்பட்டது