பக்கம்:நித்திலவல்லி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



இவர்களுடைய மெளனம் பணிவாகவும், பயமாகவும் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால் மாவலி முத்தரையர் இவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு வேறு ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

சில கணங்களில் மாவலி முத்தரையரைத் தேடிக் களப்பிரப் பூத பயங்கரப் படைத் தலைவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுடன் ஆயுதபாணிகளாகப் பூதபயங்கரப் படை வீரர்களும் வந்திருந்தனர்.

“நம்மைப்போல் அரசியல் காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையாக விழித்திருக்க வேண்டும். ஒரு விநாடி தாமதமாகவோ, பின் தங்கியிருந்தோ விழித்தால் கூடப் பெரிய தோல்விகள் வந்துவிடும். இந்தச் சிறைக் கோட்டத்துக் காவலை இரு மடங்காக ஆக்க வேண்டும் என்பதை இப்படி நான் சொல்லி நீ செய்யும்படி ஆகியிருக்கக் கூடாது. இவர்களை மட்டுமே இங்கிருந்து தப்ப விட்டு விடுவோமானால், மிக விரைவில் இந்தக் களப்பிரர் ஆட்சியே பறி போய் விடும் என்பதை நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குப் புரியவில்லை” என்று மாவலி முத்தரையர், பூத பயங்கரப் படைத் தலைவனிடம் இரைந்து கொண்டிருப்பது உள்ளே நின்ற இவர்களுக்கும் கேட்டது. சிறைக் கோட்டத்தின் வாயிலில் காவலுக்கு நிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிமாக்கிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலிமைப் படுத்தப் போகிறார்கள் என்பதும் உள்ளே இருப்பவர்களுக்குப் புரிந்தது. இந்த நிலைமை அவர்கள் கவலையை அதிகமாக்கியது.

வெளியே மாவலி முத்தரையரின் குரல் கேட்கவில்லை. இப்போது அவர் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. பூத பயங்கரப் படைத் தலைவன் மட்டும் காவல் வீரர்களுக்கு, ஏதோ எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருப்பது கேட்டது.

சிறிது நேரம் கழித்துக் தென்னவன் மாறனும், அழகன் பெருமாளும் முற்றிலும் எதிர்பாராதவிதமாக வீரர்கள் சூழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/311&oldid=946528" இலிருந்து மீள்விக்கப்பட்டது