பக்கம்:நித்திலவல்லி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


அழகன் பெருமாளின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்திற்கு உள்ளே, தன்னோடு அழைத்து வந்த வீரர்களை வெளிப்புறம் மதிலோரமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்பது அழகன் பெருமாளின் சந்தேகமாயிருந்தது. எந்த விநாடியில் பூத பயங்கரப் படைத் தலைவன் குரல் கொடுத்தாலும், வெளியே இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஓடி வர முடியும் என்ற நிலைமையை உய்த்துணர்ந்து நிதானமாக இருந்து விட்டான் அழகன் பெருமாள்.

வந்திருந்த களப்பிர வீரர்கள் தென்னவன் மாறனையும், அறக்கோட்டத்து மல்லனையும் விலங்கிட்டுச் சங்கிலியால் பிணிக்கத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் இருவரும் பிணிக்கப்படும் போது மற்ற எட்டுப் பேரும் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்று முகங்களிலிருந்தே கண்டு பிடிக்க முயன்றவன் போல் இவர்களையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தான் அந்தக் களப்பிரப் படைத் தலைவன். இவர்களும் அது புரிந்து மிகவும் தந்திரமானதும், எதிரி புரிந்துகொள்ள முடியாததுமான அமைதியைக் கடைப் பிடித்தனர். அந்த விநாடி வரை தன் கட்டளையையும் பேச்சுகளையும் பாலியிலேயே நடத்திக் கொண்டிருந்த களப்பிரப் படைத் தலைவர்களின் பேச்சையோ, எதையுமோ தெரிந்து கொள்ளாதது போல், அதே சமயம் எல்லாவற்றையுமே புரிந்து கொண்டும் தெரிந்து கொண்டும் மெளனமாக இருந்தார்கள் இவர்கள். இவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டது போலும் அறிந்து கொண்டது போலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்களேயானால் இவர்களுக்கு எந்த அளவு பாலி மொழி தெரியும் என்பதை அதிலிருந்து அவன் அனுமானிக்கக் கூடும். முதல் முயற்சியில் அவனால் அதைச் சாதிக்க முடியவில்லை. எனவே, தான் அறிந்தவரை உச்சரிக்க முடிந்த பிழையான கொச்சைத் தமிழில், “இவர்கள் இருவரையும் தனியே வேறு சிறையில் பிரித்து வைக்க வேண்டும். இவர்களைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் செல்லுங்கள்” என்ற பொருளில் கூறினான் அவன். தன்னுடைய கட்டளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/313&oldid=946530" இலிருந்து மீள்விக்கப்பட்டது