பக்கம்:நித்திலவல்லி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


நாம் எல்லாரும் சேர்ந்தே இங்கிருந்து தப்ப முடியும்! இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்ற பொருள் புரியத் தென்னவன் மாறனுக்குச் சைகை மூலம் அறிவித்தான் அழகன் பெருமாள். இந்தச் சைகையைத் தவிர வேறெதையும் இவர்களால் செய்ய முடியவில்லை. இவர்கள் எட்டுப் பேரையும் விலங்குகளாலோ, இரும்புச் சங்கிலிகளாலோ இட்டுப் பிணிக்காமல், அப்படியே அந்தப் பழைய சிறைக் கோட்டத்தில் அடைத்து விட்டுப் போனார்கள். பூத பயங்கரப் படைத் தலைவனும் வீரர்களும், வந்தவர்கள் எல்லோரும் போய் விட்டார்கள் என்பதையும் தாங்கள் எட்டுப் பேர் மட்டுமே இருக்கிறோம் என்கிற தனிமையையும் உறுதி செய்து கொண்ட பின், இவர்கள் மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசித் திட்டமிடலாயினர்.


16. யார் இந்த ஐவர்?

“என்னப்பா இது? உன்னைப் போல் மந்திரக்காரர்களையும், தந்திரக்காரர்களையும் நம்பினால் இப்படித்தான் பாதிக் கிணறு தாவ முடியும் போலிருக்கிறது!” என்று கழற்சிங்கன், தேனூர் மாந்திரீகனைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கிய போது, ‘இப்படி எல்லாம் பேசாதே! வாயை மூடு!’ - என்பது போல் கழற்சிங்கனைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அழகன் பெருமாள். கழற்சிங்கன் உடனே பேசுவதை நிறுத்தி விட்டான். அழகன் பெருமாள் சிறிது நேரம் யாரிடமும் எதுவும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தங்கள் தலைவனின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்து கொண்டு, அதை மதிப்பது போல் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அழகன் பெருமாள் மேல் விளைவுகளை நினைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/315&oldid=946532" இலிருந்து மீள்விக்கப்பட்டது