பக்கம்:நித்திலவல்லி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

317



“அரச விசுவாசமுள்ள பாண்டியர் குடி மக்கள் போல் நேற்று வரை நானும் என்னைச் சேர்ந்தவர்களும் புறநகரில் உப வனத்திலும், அகநகரிலும் உரிமையோடும், பயமின்றியும் பழக முடிந்தது போல் இனி மேல் பழக முடியாது. என்னுடைய அந்தரங்கமும், என்னோடு உப வனத்தில் உடனுறைந்து வாழ்கிறவர்களின் அந்தரங்கமும் களப்பிரப் பேரரசுக்குத் தெரிந்த பின் இனிமேல் நாங்கள் எந்தச் சார்பும் அற்ற மனிதர்களாக எங்களைக் காண்பித்துக் கொள்ள முடியாது. காதும் காதும் வைத்தாற் போல், மீட்க வந்தவர்களையும் மீட்டுக் கொண்டு தப்பியிருந்தோமானால், கவலையில்லை. அப்படி மீட்கவும், தப்பவும் முடியாததால், என்னதான் மாறு வேடத்தில் இருந்தும் பயனில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளைப் பொழுது புலர்ந்ததும், யார் யார் என்று எதிரிகளுக்கு நம்மைப் பற்றிப் புரிந்து விடும். பாண்டியர்களின் மனிதர்கள் என்றுதான் இதுவரை பொதுவாகப் புரிந்திருக்கும். அந்தக் காம மஞ்சரிக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்தாலும், மாவலி முத்தரையருக்கோ, ‘பூத பயங்கரப்படைத் தலைவனுக்கோ இன்னும் அவ்வளவு தெரிந்திருக்க நியாயமில்லை. பூத பயங்கரப் படையினர் போன்ற வேடந் தாங்கித் தங்களவர்களைச் சிறை மீட்க வந்த பாண்டியர்களின் ஆட்கள்’ என்று மட்டும்தான் இந்த விநாடி வரை அவர்கள் நம்மைப் பற்றி அறிந்திருக்க முடியும் என்றாலும், தொடர்ந்து இங்கே சிறையில் இருக்க நேரிடுகையில், இதை விட அதிகமாகக் களப்பிரர்கள் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முயலுவார்கள். விரைந்து தப்பாவிடில் பல தீய விளைவுகள் இருக்கும்’ - என்று சிந்தித்தான் அழகன் பெருமாள். நண்பர்கள் ஏதேதோ வழிகளைச் சொன்னார்கள். மனநிலை தெளிவாக இல்லாததால், “விடிந்த பின்பு சிந்திப்போம்” என்றான் அழகன் பெருமாள். ஆனாலும் அந்தக் குழப்பமான மனநிலையில் கூட,

“களப்பிரர்களில் யார் இங்கே வந்தாலும், எதை வினவினாலும் அவசரப்பட்டு முந்திக் கொண்டு யாரும் எந்த மறு மொழியையும் சொல்லி விடாதீர்கள். மறு மொழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/316&oldid=946533" இலிருந்து மீள்விக்கப்பட்டது