பக்கம்:நித்திலவல்லி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

319


பெருமாளின் முகம் மலர்ச்சி உற்றதையும், அவர்கள் கண்டிருந்ததனால் அவர்களுடைய ஆவல் இன்னும் பெருகியிருந்தது.

மைச்சிமிழை மூடி, மறுபடியும் மேலாடையில் முடிந்து கொண்டான் மாந்திரீகன். அதற்குப் பின் விடியும் வரை அவர்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிறைக் கோட்டத்தின் கரடு முரடான கல் தளத்தில் உடலைச் சாய்ப்பதும், உறங்குவதும் களைப்புக் காரணமாகச் சிரமமானவையாகத் தெரியவில்லை அவர்களுக்கு. அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் அருகருகே படுத்திருந்ததனால், இடையிடையே மெல்லிய குரலில் தங்களுக்குள் மட்டும் ஏதோ உரையாடிக் கொள்ள முடிந்தது. மற்றவர்களுக்கோ ஆவலின் காரணமாக, உரையாடாமல் வாளா இருந்த நேரத்தில் கூட அவர்கள் ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருப்பது போல் கேட்டது. சிறிது நேரம்தான் இந்த ஆவல், பரபரப்பு எல்லாம் இருந்தன. அப்புறம் அயர்ந்துவிட்ட காரணத்தால் யாருக்கும் எதுவும் நினைவிருக்கவில்லை.

மறுநாள் பொழுது புலர்ந்தது. நண்பர்கள் எட்டுப் பேருக்கும் பயங்கரமான பசி. களப்பிரர்கள் சிறைப்பட்ட எதிரிகளுக்கு உணவு தருவார்களா, அல்லது சிறைப்பட்டவர்களே தங்களுக்கு உணவுதானே என்று சாக விட்டு விடுவார்களா என்பது தெரியவில்லை. அந்த நிலையில் முற்றிலும் எதிர்பாராமல், ஐந்து புதிய மனிதர்கள் அவர்களைத் தேடிச் சிறைக் கோட்டத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழர்களைப் போல் தோன்றினர். உடை, சாயல் எல்லாம் அப்படியே இருந்தன. வந்தவர்களிடம் ஒரு பெரிய ஒலைக் கூடை நிறைய பிட்டு, அப்பம் முதலிய பணியாரங்கள் இருந்தன. சிறைக் கோட்டத்துக் கதவுகளை எல்லாம் கூட அவர்கள் திறந்து கொண்டு உள்ளே வந்து, பணியாரக் கூடையை அழகன் பெருமாள் முதலியவர்களை வணங்கி விட்டு, எதிரே வைத்தனர். வைத்தவுடனே மூவரும் சொல்லி வைத்தது போல் ஒன்றாகத் தலை நிமிர்ந்து இந்த எட்டுப் பேரையும் பார்த்து இரகசியம் பேசுவதை ஒத்த குரலில் 'கயல்' என்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/318&oldid=946535" இலிருந்து மீள்விக்கப்பட்டது