பக்கம்:நித்திலவல்லி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


பற்றிய சிறிய அன்பு அதில் கரைந்து போய் விடுகிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.”

“என்னை மறப்பதற்கும், நிராகரிப்பதற்கும் நீங்கள் கூறுகிற தத்துவமோ இது?”

“மனிதர்களை மறப்பதற்கும், நிராகரிப்பதற்கும் தத்துவங்கள் பிறப்பதில்லை. தத்துவங்களுக்கு மறப்பதையும், நிராகரிப்பதையும் விட உயர்ந்த நோக்கங்கள் உண்டு.”

“ஆனால் மனிதர்களுக்கு மட்டும் சமயா சமயங்களில் அப்படி உயர்ந்த நோக்கங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை.”

இதைக் கேட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரித்தான் இளையநம்பி. ஒரு கவலை நிறைந்த சூழ்நிலையில், தன் உரையாடலால் அவனை மனம் நெகிழ்ந்து சிரிக்கச் செய்தது, இரத்தினமாலைக்குத் திருப்தியைக் கொடுத்தது.

“உன்னைப் போல் வசீகரமும், மயக்கும் சக்தியும் உள்ள பெண்கள்தான் வீரர்களின் முதல் எதிரிகள். எவ்வளவு பெரிய வீரனின் அன்பையும், ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டு வந்து அடக்கி விடுகிறீர்கள் நீங்கள்!”

இப்போது அவள் அவன் முகத்தை ஒரக் கண்களால் நோக்கி மெல்ல நகைத்தாள்.

“உன்னுடைய தடையையும், பாதுகாப்பையும் மீறி நான் இந்த மாளிகை எல்லையைக் கடந்து நகர வீதிகளைக் காணப் புறப்பட்டால் நீ என்ன செய்வாய்? எனக்கு இங்கிருந்து வெளியே புறப்பட்டுச் செல்ல வேண்டும் போல ஆசையாயிருக்கிறது.”

“உங்கள் ஆசைகள் உங்களைவிடப் பெரிய சக்தியால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. நீங்கள் நினைத்தபடி எல்லாம் ஆசைப்பட்டு விட முடியாது. ஆசைப்பட்ட படியெல்லாம் நினைத்து விடவும் முடியாது.”

“இதற்கு ஒர் இடம் மட்டும் விதிவிலக்கு!”

“எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/321&oldid=946538" இலிருந்து மீள்விக்கப்பட்டது