பக்கம்:நித்திலவல்லி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



நடு இரவு கழிந்து, பனியும் மென்காற்றும், பூக்களின் மலருங் காலத்துப் புது மணமும் ஒன்று சேர்ந்து புறப்படும் பின்னிரவு வந்து கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் இருவருமே மஞ்சங்களில் அமர்ந்து, பேசிக் கொண்டுதான் இருந்தனர். இருவருக்கும் உறக்கம் அறவே கலைந்து போய் விட்டது. ஒரே ஒரு நாள் நகர வீதிகளில் போய்த் தன் விருப்பப்படி சுற்றிப் பார்க்க ஆசை தெரிவித்தான் இளையநம்பி. அவளோ, அவனை அப்படி விருப்பம் போல் வெளியே அனுப்புவதற்கு இசையவில்லை. சிரித்தும், பேசியும் அவனை வசியப்படுத்தி மயக்கி, அவனுடைய வெளியேறும் விருப்பத்தை மெல்ல மறக்கச் செய்ய முயன்றாள்.

இளம் வைகறையின் சீதக் காற்று பூக்களின் நறுமணங்களோடு சாளரத்தின் வழியே உட்புகுந்தது. பணிப் பெண் ஒருத்தி புறத்தே வந்து நின்று குரல் கொடுத்தாள். முதலில் இரத்தினமாலைதான் எழுந்து சென்று பணிப் பெண்ணை எதிர் கொண்டாள். பின் தொடர்ந்து இளையநம்பியும் சென்றான். வந்த பணிப் பெண்ணின் முகத்தில் பதற்றமும் கலவரமும் தெரிந்தன. வார்த்தைகளால் எதுவும் கூறாமல் நிலவறை முனை உள்ள சந்தனம் அரைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டினாள் பணிப்பெண்.

உடனே இளைய நம்பியும் இரத்தினமாலையும் அங்கே விரைந்தனர். நிலவறை வழிக்குக் காவலாக இருக்கட்டும் என்று இரு பணிப் பெண்களை, ஒவ்வோர் இரவிலும் சந்தனம் அரைக்கும் பகுதியிலேயே படுத்துக் கொள்ளப் பணித்திருந்தாள் இரத்தினமாலை. அவர்களில் ஒருத்திதான் இப்போது எழுந்து வந்திருந்தாள். மற்றொருத்தி சந்தனம் அரைக்கும் பகுதியின் முன்புறம் தூக்கக் கிறக்கத்தோடு தளர்ந்து போய் நின்று கொண்டிருந்தாள். இரவாயிருந்தபடியினாலும், நிசப்தத்தினாலும் சிறிய ஒலி கூடப் பெரியதாகக் கேட்டது. வழக்கமாக அந்த நேரத்திற்கு நிலவறை வழியே யார் வந்தாலும், சிறிது தொலைவில் வரும் பொழுதே படியேறி மேற்புறம் அடைப்புக் கல்லைத் திறப்பதற்கு முன்பே ஒசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/323&oldid=946540" இலிருந்து மீள்விக்கப்பட்டது