பக்கம்:நித்திலவல்லி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


புதிய நல்லடையாளத்தை நான் அனுப்பிவிடுவேன். வட பாண்டி நாட்டுக்குத் திருமோகூர்க் கொல்லன் மூலமாகப் பரவி விடும் என்று பெரியவரே எழுதியிருக்கிறார். தென்பாண்டி நாட்டுக்குச் செய்தி அனுப்பும் பொறுப்பை இந்த மாளிகை ஏற்றுக் கொண்டால் நல்லது” என்றான் அந்துவன்.

“இந்த மாளிகையில் ஏழு புறாக்கள் இருந்தன. அதில் ஒரு புறா சென்ற திங்களில் எங்கோ சென்று திரும்பும் போது, பருந்துக்கு இரையாகிவிட்டது. ஆறு புறாக்கள் இருக்கின்றன. ஆறு இடங்களுக்குக் கரந்தெழுத்தில் ஒலைத் துண்டுகளை அனுப்பமுடியும்” என்று இரத்தினமாலையும் அதற்கு இணங்கிய பின், அவளிடமும் இளைய நம்பியிடமும் சொல்லி விடை பெற்றுக் கொண்டு, விரைவாகத் திரும்பி நிலவறையில் இறங்கிச் சென்றான் அந்துவன்.


18. உட்புறம் ஒரு படிக்கட்டு

ந்த ஐவரும் அழகன் பெருமாள் முதலியவர்களை மன்றாடாத குறையாகப் பணிந்து இறைஞ்சிப் பார்த்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருக்கும் சுவையான பணியாரங்களை உண்டு, பசியாறுமாறு வேண்டினார்கள். மீண்டும் மீண்டும் வந்தவர்களாகிய அவர்கள் தான் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, அழகன் பெருமாளோ அவனுடன் இருந்தவர்களோ வாயைத் திறக்கவே இல்லை. வந்த ஐவரில் ஒருவன், மீண்டும் பழைய வாக்கியத்தையே திரும்பவும் சொன்னான்;

“நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள். எங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்வதைக் க்ண்டு நான் மிகவும் வருந்துகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/327&oldid=946544" இலிருந்து மீள்விக்கப்பட்டது