பக்கம்:நித்திலவல்லி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

329



அழகன் பெருமாள் இப்போது மறு மொழி கூறவில்லை. அவனுடைய சந்தேகமே, தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. வந்திருப்பவர்கள் உண்மையிலேயே உதவ வந்த நண்பர்களாகவும், மதுராபதி வித்தகரின் தலைமைக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தால், அவரை இப்படி முற்றிலும் அந்நியமான ஒரு பெயரால், 'நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார்’ என்று அழைக்க முடியாது. தன்மையான மனிதர்களிடம், அவரைக் குறிக்கப் 'பெரியவர்' என்ற பெயரே மதிப்புக்குரியதாக வழங்கி வருகையில், இவர்கள் அந்தப் பெயரையே அறியாதவர்கள் போல் புது விதமாகக் கூப்பிட்ட வேறுபாட்டை உணர்ந்து கொண்டான் அழகன் பெருமாள். இந்த வேறுபாடு வெண்பளிங்கிற் சிவப்பு நூல் கோர்த்தது போல் தனியே நிறம் விட்டுத் தெரிந்த ஒரே காரணத்தால்தான், வந்தவர்கள் கூறிய நல்லடையாளச் சொல்லை அவன் பொருட்படுத்தவே இல்லை. தங்களை உளவு அறிய, மாவலி முத்தரையர் சிறைக்குள்ளேயே அனுப்பியிருக்கும் மனிதர்களாகத்தான் இவர்கள் ஐவரும் இருக்க வேண்டும் என்று அழகன் பெருமாளுக்கு உறுதியாகப் புரிந்துவிட்டது. ஆகவே அவன் உணர்வுகள் நன்றாக விழித்திருந்தன.

அப்போது வந்தவர்களில் ஒருவன் மீண்டும் பேசலானான்;

“நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் ஆட்கள் என்று சொல்லியும் நீங்கள் எங்களை மதிக்கவில்லை! ‘கயல்’ என்று அடையாளச் சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறியும் ஏற்கவில்லை...”

முதன்முதலாக இப்போதுதான் அழகன் பெருமாள் அவர்களுக்கு மறுமொழி கூற முன் வந்தான். வந்திருக்கும் பகைவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்கிற திட்டத்தோடு, பேசியவனிடம் அழகன் பெருமாள் வினாவத் தொடங்கினான்:-

“ஐயா! உங்கள் அக்கறையைக் கண்டு மிகவும் வியப்படைகிறேன். ஆனால் ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/328&oldid=946545" இலிருந்து மீள்விக்கப்பட்டது