பக்கம்:நித்திலவல்லி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


மதுராபதியார் என்று நீங்கள் ஏதோ ஒரு பெயர் சொல்கிறீர்களே, அந்தப் பெயர்தான் எங்களுக்கு விளங்கவில்லை. இன்னும் நீங்கள் ஐவரும் இங்கே உள்ளே நுழைந்தவுடன் ‘கயல்’ என்று ஏதோ ஒரு வார்த்தை கூறினீர்கள், அதையும் எதற்காகக் கூறினீர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை.”

வந்தவர்களின் முகங்களில் குழப்பம் தெரிந்தது. முதலில் அழகன் பெருமாளோடு பேசியவனே, திரும்பவும் பேசத் தொடங்கினான்:-

“விளங்காமல் இருப்பதற்கும், விளங்காமல் இருப்பது போல் பாவனை காட்டுவதற்கும் வேறுபாடு தெரிய முடியாத அளவுக்கு நாங்கள் சிறுபிள்ளைகள் இல்லை. புரியாமல் இருப்பதற்கும், புரியாததுபோல் நடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.”

புதியவனின் இந்த மறுமொழியில் இருந்த உணர்ச்சி வேகமும், கோபமுமே அழகன் பெருமாளின் சந்தேகம் நியாயமானது என்பதை நிரூபித்து விட்டன. வந்திருப்பவர்களின் உரையாடலில் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தீர்ந்து போய்த் தாங்கள் களப்பிர ஒற்றர்கள் என்பதை அவர்களாக அறிவிப்பது போல், இயல்பாய் அவர்களால் பேச முடிந்த பேச்சைப் பேசுகிற வரை விடுவதில்லை என்ற பிடிவாதத்துடன் அவர்களைத் திகைக்கச் செய்தான் அழகன் பெருமாள். அவன் எண்ணி எதிர்பார்த்தது நடந்தது. நடிப்பதற்குரிய வார்த்தைகள் தீர்ந்து, வந்தவர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க நேர்ந்த சமயம் பார்த்து, அழகன் பெருமாள் சிரித்துக் கொண்டே...

“நல்லது! நீங்கள் விடை பெற்றுப் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ உங்கள் பணியாரக் கூடையையும் எடுத்துக் கொண்டு போகலாம். களப்பிரர்கள் விருந்தினருக்கு நஞ்சு கலந்த பணியாரங்களை உணவாகப் படைக்கும் அசுர வழக்கத்தை எப்போது கற்றார்கள் என்று எங்களுக்கு வியப்பாயிருக்கிறது. ஆனாலும் அதற்காக உங்களை நாங்கள் மன்னிக்க முடியும்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/329&oldid=946546" இலிருந்து மீள்விக்கப்பட்டது