பக்கம்:நித்திலவல்லி.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

331



“குற்றவாளிகள் மன்னிக்க முடியாது. மன்னிக்கப்பட முடியும்!”

“உண்மைதான்! யார் குற்றவாளிகள் என்பது தெரிந்துதான், நான் உங்களை மன்னிக்க முடியும் என்று சொன்னேன். உணவில், நீரில், பாலில் நஞ்சிடுபவர்களை விடப் பெரிய குற்றவாளிகள், நரகத்தில் கூட இருக்க முடியாது.”

“யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரிந்துபேசுங்கள்!”

“அதுதான் முதலிலேயே தெரிந்துவிட்டதே ஐயா! தெரிந்துதான் ஒன்றுமே பேசாமல் இருந்தேன். பேசாமல் இருந்தவனை, நீங்கள் தான் பேச வைத்தீர்கள். இப்போதோ நான் பேசினால், உங்களுக்கே கோபம் வருகிறது. தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். விரோதியைப் போல் கோபித்துக் கொண்டு புறப்படுகிறீர்கள். நீங்கள் நண்பர்கள் போல் வந்ததற்கும் நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் விரோதிகள் போல் இப்போது இப்படிக் கடுங்கோபத்தோடு திரும்புவதற்கும் நாங்கள் பொறுப்பில்லை.”

“சிறைப்பட்டிருப்பவர்களுக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாது.”

“சிறைப்படுத்தியிருப்பவர்களுக்கு இவ்வளவு மமதை இருந்தால், சிறைப்பட்டவர்களுக்கும் ஏதாவது இருக்கத் தானே செய்யும்?”

இதைக் கேட்டு அழகன் பெருமாளை உறுத்துப் பார்த்தார்கள் அவர்கள். அழகன் பெருமாளும் நண்பர்களும் ஒதுங்கி நின்று, அவர்களுக்கு வழி விட்டனர். வந்தவர்கள் ஐவரும் ஏமாற்றத்தோடும் பணியாரக் கூடையோடும் திரும்பிச் சென்ற பின்,

“இது ஒரு பெரிய சூழ்ச்சி நாடகம்! நம்மை மாட்ட வைப்பதற்கு மிக மிகத் தந்திரமாக வலை விரித்திருக்கிறார்கள் களப்பிரர்கள். விழிப்பாக இருந்ததால் பிழைத்தோம்” என்று நண்பர்களை நோக்கிக் கூறினான் அழகன் பெருமாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/330&oldid=946547" இலிருந்து மீள்விக்கப்பட்டது