பக்கம்:நித்திலவல்லி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

333


கொண்டு உள்ளே வரலானார்கள். அழகன் பெருமாள் திடுக்கிட்டுப் போனான். செய்து கொண்டிருந்த காரியத்தை எப்படி உடனே மறைப்பது என்று புரியவில்லை. பின்புறம் திரும்பி நண்பர்களுக்கு அவன் சைகை செய்யக் கூட அவகாசம் இல்லை. அவர்களும் உள்ளே வரத் தொடங்கி விட்டார்கள். வருகிறவர்களை முன்பாகவே எதிர் கொண்டு சென்றான் அழகன் பெருமாள். திகைப்பினால் அவன் நெஞ்சு விரைந்து அடித்துக்கொண்டது, பதறியது.


19. மரபு என்னும் மூலிகை

ந்த மலைச் சாரலில் சிலம்பாற்றின் கரையில், பொழுது புலர்வது மிக மிக அழகாயிருந்தது. பசுமைச் செறிவினிடையே பல்லாயிரம் பல்லாயிரம் இரத்தினங்களைக் கீழ்த் திசையிலிருந்து தூவினாற் போலக் கதிரவனின் ஒளி வீச்சுக்கள் நுழைந்தன. பிரம்ம முகூர்த்தமாகிய மங்கல வைகறை வேளையிலேயே, மதுராபதி வித்தகர் துயில் எழுந்து புறப்பட்டு விட்டார். அவரைப் பொறுத்த வரை ஆழ்ந்த உறக்கம் என்பதை நீத்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. பாண்டிய குலத்தை மறுபடி அரியணை ஏற்றுகிற வரை அவரால் உறங்க முடியாது போலிருந்தது. எப்போதும் எதையாவது சிந்தித்துத் திட்டமிட்டுக் கொண்டே இருந்ததால், அவர் உறங்குவது போல் உடலை மான் தோலில் கிடத்தியிருந்தாலும் அது அறிதுயிலாகவே அமைந்தது. அந்த அறிதுயிலில், நினைப்புகள் உண்டு. செயல்களைப் பற்றிய எதிர்காலச் சிந்தனைகள் உண்டு. தவங்களும் உண்டு. ஆனால், துயில்தான் கிடையாது.

முந்திய இரவில் திருமோகூர்க் கொல்லன் மாறோகவள நாட்டுக் கொற்கைப் பெருஞ்சித்திரனைக் கொற்றவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/332&oldid=946549" இலிருந்து மீள்விக்கப்பட்டது