பக்கம்:நித்திலவல்லி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

343


இன்னொன்று இப்போதுதான் நினைவு வருகிறது. நான் அங்கிருந்து புறப்படுமுன் தங்களிடம் தெரிவிப்பதற்கென்று ஏதோ சில அந்தரங்கமான செய்திகளைத் தொகுத்து, என்னிடம் உரைப்பதாகக் கூறியிருந்தார். புறப்படும் முன்பாக நானும் அவற்றை எல்லாம் நினைவூட்டிக் கேட்டேன். ஆனால் என்ன காரணத்தாலோ கடைசியில் எதுவும் கூறாமலே, முத்துகளுடன் அவர் என்னை அனுப்பிவிட்டார்....”

“கூறுகிறவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாவிட்டால், கூறப்படுகிறவர்களால் எதையும் பெறமுடியாமல் போவது இயல்பு...”

“.......”

“நிகமத்தான் இங்கு வருவதாகச் சொன்னானா?”

“என்னிடம் அப்படி ஏதும் சொல்லவில்லை... ஆனால், வந்தாலும் வரலாம் ஐயா!”

“பதில் மட்டும் போதும்! உன்னுடைய அநுமானமோ, உய்த்துணர்வோ எனக்குத் தேவையில்லை. ஏனெனில் அவற்றைச் செய்யவோ, சொல்லவோ போதிய பக்குவம் உனக்கு வந்திருப்பதாகத் தோன்றவில்லை. இப்போது நீ போகலாம். நான் மறுபடி சொல்கிற வரை நீ இங்கிருந்து எங்கும் போகக் கூடாது. இந்த மலை எல்லையில், இதோ உன் அருகில் இருக்கிறானே இவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டு எப்போதும் உன்னோடு இருப்பான். நீயாகத் தனியே எங்காவது செல்ல முயன்றாயோ களப்பிரர்கள் பனங்காயைச் சீவுவது போல் உன் தலையைச் சீவி விடுவார்கள்...”

இதைக் கேட்டு அவன் முகத்திலும், கண்களிலும் பயத்தின் சாயல் வந்து படர்ந்தது. அவரை வணங்கி விட்டு, வெளியே இருந்த முனையெதிர் மோகர் படை வீரனோடு போய்ச் சேர்ந்து கொண்டான் அந்த இளைஞன். அந்தக் காவல் வீரனை மட்டும் தனியே உள்ளே கையசைத்து அழைத்தார் மதுராபதி வித்தகர். அவன் வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/342&oldid=946559" இலிருந்து மீள்விக்கப்பட்டது