பக்கம்:நித்திலவல்லி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


ஒடிப்போய்த் தந்தையாருக்கு முன் நிற்கவும் தயக்கமாக இருந்தது மகளுக்கு. ஒரு வேளை தாய் எழுந்து போய்த் தந்தையாரும், கொல்லனும் பேசுகிற இடத்தில் நின்று கொண்டால், தானும் தாயோடு சென்று நிற்க முடியும் என்று தோன்றியது மகளுக்கு. அவள் தாயைக் கேட்டாள்:

“அம்மா! கொல்லன் மறுபடியும் திரும்ப வந்திருக்கிறான் போலிருக்கிறதே; தந்தையும், கொல்லனும் பேசிக்கொள்ளும் குரல் கேட்கிறதே?”

“ஆமாம்! கொல்லன் வந்திருக்கிறான்...”

“நான் எழுந்திருந்து போக நேரமாகவில்லையா அம்மா? நீராடப் போகும் வேளையாகிவிட்டதே!”

“மகளே! நீராடப் போவதற்காகப் புறப்பட வேண்டுமா? அல்லது கொல்லனும் உன் தந்தையும் உரையாடுவதைக் கேட்க வேண்டுமா? உன் மனம் எனக்குப் புரிகிறது” என்று கேட்டுவிட்டு மெல்லச் சிரித்தாள் செல்வப் பூங்கோதையின் தாய். மகள் தன் குறிப்புத் தாய்க்கும் புரிந்து விட்டதை அறிந்து நாணினாள்.

தன் அந்தரங்கத்தைப் புரிந்து கொண்ட அன்னையின் முன் பேசத் தயங்கிச் சில கணங்கள் வாளாவிருந்தாள் செல்வப் பூங்கோதை.

ஆயினும் மகளின் மனங்கோணாமல் நடந்து கொள்ள ஆசைப்பட்ட தாய் நீராடப் பொய்கைக்குச் செல்வது போல், குடத்தோடு மகள் பின் தொடரக் கூடத்தில் போய் நின்று கொண்டாள். இருவரும் கூடத்தில் நுழைந்த வேளையில்-

“...சிறைப்பட்டு விட்டவர்களைக் களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது’ என்று கொல்லன் பெரிய காராளரிடம் கூறிக் கொண்டிருந்தான். அவ்வளவில், தாயும், மகளும் எதிர்பாராத விதமாகப் பெரிய காராளரும், கொல்லனும் பேசிக் கொண்டே வெளியேறிப் போய் விட்டார்கள். அதிகாலையிலே நெற்கழனிகளிடையே வரப்புகளில் நடந்து உலவித் திரும்புகிற வழக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/347&oldid=946564" இலிருந்து மீள்விக்கப்பட்டது