பக்கம்:நித்திலவல்லி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

349


உடைய காராளர், கொல்லனையும் பேசிக் கொண்டே தம்மோடு வருமாறு கூப்பிட்டுக் கொண்டு போய் விட்டார் என்பதை அவர்கள் உணர முடிந்தது.

ஆனால், கொல்லனின் வாய் மொழியாய் அரைகுறையாகக் கேட்ட அந்த வாக்கியம் மட்டுமே, அவள் மனத்தில் அல்லாத, பொல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கி விட்டது. எந்த உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்றால், தன் இதயத்தைக் கொள்ளை கொண்டவரைப் பற்றிய செய்திகள் தெரியும் என்று நம்பி அவள் தாயோடு எழுந்து வந்தாளோ, அந்த நோக்கம் இப்போது வீணாகி விட்டது. ஆனாலும் கூட்டத்திற்குள் நுழைந்த வேளையில் காதில் விழுந்த வாக்கியத்தில், ‘களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது?’ ... என்று குறிப்பிட்டது யாரை எண்ணிக் குறிப்பிட்டதாக இருக்கும்? ஒருவேளை திருக்கானப்பேரைச் சேர்ந்தவர் கோநகரில் ஏதாவது தீய சூழ்நிலையின் காரணமாகக் களப்பிரர்களிடம் சிக்கிக் கொண்டு விட்டாரா? அவரை மீட்பதுதான் கடினமாகத் தோன்றுகிறது என்று கொல்லன் தந்தையிடம் கூறிக் கொண்டு போகிறானா? என்றெல்லாம் எண்ணி எண்ணிச் சஞ்சலமும், சலனமும், கவலையும் அடைந்து கொண்டிருந்தது அவள் உள்ளம்.

“அம்மா! நீயும், நானும் இங்கே உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நீ கேட்டாயா? ஏதோ கவலைப்படுவதற்குரிய காரியம் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு தீவிரமாகச் சிந்தித்தபடியே பேசிக் கொண்டு வெளியே போக மாட்டார்கள் அவர்கள் இருவரும். என் மனமோ காரணம் புரியாமலே வேதனை கொள்கிறது. நீ என்ன நினைக்கிறாய்? கடவுள் அருளால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது அல்லவா?" என்று உருகி நெகிழ்ந்த குரலில், தாயைக் கேட்டாள் செல்வப் பூங்கோதை. பெண்ணின் பேதைமையையும் காரணமற்ற சந்தேகங்களையும் எள்ளி நகையாடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/348&oldid=946565" இலிருந்து மீள்விக்கப்பட்டது