பக்கம்:நித்திலவல்லி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“பொறுத்தருள வேண்டும் ஐயா! எனக்கு அப்படித் தோன்றவில்லை. இதில் ஏதோ கபடம் இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். இங்கிருந்துதான் நம்முடைய மிகப் பெரிய அந்தரங்கமான நல்லடையாளச் சொல் அவர்களுக்கு எட்டியிருக்கிறது. இங்கேயிருந்துதான் தென்னவன் மாறனையும், அறக் கோட்டது மல்லனையும் அவர்கள் சிறைப் பிடித்திருக்கிறார்கள். உங்களையும் சில நாட்கள் இந்த மாளிகை எல்லைக்குள்ளேயே காவலில் இருக்கச் செய்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே என்னிடமே ஒரு பூத பயங்கரப் படை வீரன் தேடி வந்து, நம் நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதைப் பரிசோதித்து விட்டான். பெரியவருடைய எச்சரிக்கை மனத்தில் இருந்ததால், நான் சாதுரியமாக அந்தப் பரிசோதனையில் தப்பினேன். இல்லாவிட்டால் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். முன்பு சிறைப்பட்டவர்களையே களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது. இப்போது புதிதாக நானும் மாட்டிக் கொண்டிருந்தால் என்ன ஆவது?”

இங்கே இப்படி, அவன் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த போதுதான் மாளிகையின் உட்பகுதியிலிருந்து காராளர் மனைவியும், மகளும் வருவது தெரிந்தது. ஆனால் காராளர் அதற்குள், “வா! பேசிக் கொண்டே உலாவி விட்டு வரலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டார். அவனும் அவரைப் பின் தொடர்ந்து, வெளியேறிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு சில காரணங்களை முன்னிட்டுப் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தியை அவரிடம் தனிமையில் கூற விரும்பினான் அவன். அதனால் அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கூறிய போது, அவனும் அதை விரும்பி உடன் சென்றான். மாளிகையிலிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே, “பெரியவர் மதுராபதி வித்தகர் எங்கே, எந்தத் திசையில், எவ்வளவு தொலைவில், எப்படித் தங்கியிருக்கிறார்கள்?” என்பதைத் தமக்கு உடனே கூறச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/351&oldid=946568" இலிருந்து மீள்விக்கப்பட்டது