பக்கம்:நித்திலவல்லி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“ஆம், ஐயா! அப்போதுதான் இதனுடைய இரகசியத்தைக் காப்பாற்ற முடியும்! சிலரிடம் ‘பழைய நல்லடையாளச் சொல்லை, எங்கும், எவர் முன்னிலையிலும் திருப்பிக் கூறக் கூடாது; அது களப்பிரர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்து விட்டது' -என்ற எச்சரிக்கையை மட்டும் செய்தால் போதுமானது. புதியதைச் சொல்லவே வேண்டியதில்லை. புதிய நல்லடையாளச் சொல்லையும் மாற்றும் நிலை வரக் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு.”

“இந்த ஏற்பாடு பாராட்டத் தக்கதுதான்! ஆனால், பெரியவர் இங்கே என்னருகில் இல்லாமல் போனால், எந்த ஏற்பாடும் சிறப்பாக நடைபெறாது. அவரை வணங்குவதாலும், வழிபடுவதாலுமே நான் ஆயிரம் யானையின் பலத்தை அடைந்து வந்தேன். சில நாட்களாக, அந்தச் சுடரொளி முக மண்டலத்தைக் காணாமல் எனக்குப் பித்துப் பிடித்து விடும் போலாகி விட்டது. என்னுடைய இந்த மன நிலையை நீயாவது உணர முடியும் என்று நான் நம்புகிறேன். நானாகத் தேடிப் போய் அவரைக் காண, அவரது இருப்பிடத்தை நீ எனக்குச் சொல்ல மாட்டேன் என்கிறாய். அவராக மீண்டும் நான் நாள் தோறும் காணும் படி, இங்கு வந்து தங்கவும் வழி இல்லை என்கிறாய். அவர் தங்கியிருந்த அந்த மாபெரும் ஆலமரத்தையும், அவர் நீராடி எழும் தாமரைப் பொய்கையையும் பார்க்கும் போதெல்லாம் நான் கண்களில் நீர் நெகிழ மெளனமாக அழுவது போல் ஆகி விடுகின்றேன். தேர்ந்த வழிகாட்டியைக் கிடைப்பதற்கு அரிய குருவை, என்னிடமிருந்து விலக்கிக் கொண்டு போய் விட்டு, நல்லடையாளச் சொல்லை மட்டும் நீ வந்து எனக்குக் கூறுவதில் பயன் என்ன?”

காராளரின் உணர்ச்சிகளில் இருந்த வேதனை, அவனுக்குப் புரிந்தது. ஆயினும், அவனால் அது தொடர்பாக அவருக்கு எந்த உதவியையும் புரிய முடியவில்லை.

“நீங்கள் மதிக்கிற அதே பெரியவரை நானும் மதிப்பதால்தான், அவருடைய இருப்பிடத்தை உங்களுக்குக் கூற முடியவில்லை ஐயா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/353&oldid=946570" இலிருந்து மீள்விக்கப்பட்டது