பக்கம்:நித்திலவல்லி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


சேர்ந்து உழைக்கிறோம். கவலைப்படுகிறோம். கட்டுப்படுகிறோம்.”

காராளர் இவ்வளவு மனம் விட்டுக் கூறிய பின்பும் கொல்லன் தயங்கினான். தலை குனிந்தான். காராளருக்கும் அது அப்படி என்ன விநோத வேண்டுகோளாக இருக்கும் என்பது புரியவில்லை. அவர் கொல்லனின் முகத்தைப் பார்த்தார்.


23. இருளில் ஒரு பெண் குரல்

பூத பயங்கரப் படைத் தலைவன் பின் தொடர, மாவலி முத்தரையர் சிறைக் கோட்டத்துக்குள் வந்த போது, கீழே பாதாள நிலவறைக்குள் இருந்த தென்னவன் மாறனைக் காண்பதற்காகத் தளத்தின் கற்களைப் பெயர்த்துப் படியிறங்க முயன்று கொண்டிருந்த, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அகப்பட்டுக் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவோமோ என்று அழகன் பெருமாள் அஞ்சினான்.

அந்த அச்சமும், நடுக்கமும், உந்தித் தள்ளியதால்தான் மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக்கோட்டத்திற்கு உள்ளே நுழைந்து வருவதற்குள்ளேயே, அழகன் பெருமாள் எதிர் கொண்டு சென்று அவர்களைச் சந்தித்தான். பணியாரக் கூடையுடன் நண்பர்களைப் போல் நல்லடையாளச் சொல்லைக் கூறிக் கொண்டு வந்திருந்த அந்த ஐவரும், தங்களிடம் தோற்று ஏமாறித் திரும்பிய மறுகணமே, மாவலி முத்தரையர் வந்திருப்பதிலிருந்து, ‘அவர்களை அப்படி அனுப்பியதும் இவராகத்தான் இருக்க வேண்டும்’ என்று அழகன் பெருமாளால் அநுமானிக்க முடிந்தது. வந்ததுமே வம்புக்கு இழுத்தார் மாவலி முத்தரையர்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/355&oldid=946572" இலிருந்து மீள்விக்கப்பட்டது