பக்கம்:நித்திலவல்லி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கொண்டான் அழகன் பெருமாள். அடுத்த கணமே, மாவலி முத்தரையர் இடிக் குரலில் அவனை வினாவினார்:

“இவர்கள் ஏன் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள்? சிறைப் பட்டிருப்பவர்கள், பெருமைக்குரியவர்கள் உள்ளே வர நேரும் போது எழுந்து நின்று எதிர் கொள்ள வேண்டும் என்பதைக் கூட இவர்கள், மறந்து விட்டார்களா என்ன?”

“பசி தாகத்தினால் அவர்கள் நலிந்து போயிருக்கிறார்கள். உங்கள் சிறைக் கூடத்தில் அகப்பட்டு விட்டால் உண்ண உணவும், பருக நீரும் கூடத் தருவதில்லை. உண்ணாமலும் பருகாமலுமிருப்பவர்கள், அதற்குக் காரணமானவர்களை எப்படி மதிக்க முடியும்?” என்று அதுவரை பேசாமல் இருந்த அழகன் பெருமாள் பதில் பேசினான். மாவலி முத்தரையரும் கோபத்துடனேயே, இதற்கு மறுமொழி கூறினார்.

“இன்னும் சில நாழிகை நேரத்தில் கழுமரம் ஏறிச் சாகப் போகிறவர்கள் உண்ட பின் செத்தால் என்ன? உண்ணாமலே செத்தால் என்ன?”

“அப்படியானால், இன்னும் சில நாழிகை நேரத்தில் சாகிறவர்கள், எழுந்து நின்று எதிர் கொண்டால் என்ன? எழுந்து நிற்காமலே எதிர் கொண்டால் என்ன? கொல்லப்படப் போகிறவர்களிடத்தில், கொல்கிறவர்கள் ஏன் முறைகளையும், பெருமைகளையும் எதிர்பார்த்து வருத்தப்பட வேண்டும்?” என்று அவரிடம் பதிலுக்குச் சுடச் சுடக் கேட்டான் அழகன் பெருமாள்.

“எல்லாரையும் கொல்லுவது எங்கள் நோக்கமில்லை. எங்களுக்குப் பயன்படுகிறவர்களையும், உதவி புரிபவர்களையும் நாங்கள் துன்புறுத்துவதும் வழக்கமில்லை” என்று அதுவரை உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்த பூத பயங்கரப் படைத் தலைவன் பேசினான். வந்திருக்கும் இருவருக்குமே, தங்களை வசப்படுத்தி உண்மைகளை அறிய முயலும் நோக்கம் இருப்பதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். வந்திருக்கும் இருவரும் அதிக நேரம் சிறைக் கோட்டத்திற்குள் தங்காமல் வெளியேறி விட்டார்களாயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/357&oldid=946574" இலிருந்து மீள்விக்கப்பட்டது