பக்கம்:நித்திலவல்லி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

359


தானும், நண்பர்களும் உடனே தப்பி விடலாமென்று விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் அழகன் பெருமாள்.

ஆனால், மாவலி முத்தரையரோ, அந்தச் சிறைக் கோட்டத்தைத் தேடி வந்து அதிக நேரம் அங்கே செலவழிக்கத் திட்டம் இட்டிருந்தவர் போல், மெல்ல ஒவ்வொன்றாகப் பேசிக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தார்.

மற்றவர்கள் எல்லாரும் தளத்திலே கற்களைப் பெயர்த்த இடத்தைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு விட்டதனால், மாவலி முத்தரையருடனோ, பூத பயங்கரப் படைத் தலைவனுடனோ உரையாட அழகன் பெருமாள்தான் எஞ்சியிருந்தான்.

மாவலி முத்தரையர் நயமாகவும், பயமுறுத்தியும் ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அழகன் பெருமாள் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் தந்திரமாக அவருக்கு மறுமொழி கூறி வந்தான்.

மாவலி முத்தரையர் கேட்டார்:

“கயல் மீன் அடையாளம் பாண்டிய மரபினருக்குச் சொந்தமானது. இப்போது பாண்டியர்கள் ஆட்சியுரிமையோடு இல்லை என்றாலும், மறுபடி பாண்டியர் நாட்டைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்றும் அங்கங்கே இருக்கிறார்கள். கயல் என்கிற சொல்தான் அவர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. இவையெல்லாம் எனக்குத் தெரியும்...”

“அப்படியா?... எனக்கு இவற்றைப் பற்றி எதுவுேமே தெரியாது ஐயா” என்றான் அழகன் பெருமாள். இதைக் கேட்டு மாவலி முத்தரையர், பற்களையும், உதடுகளையும் இறுக்கிக் கடித்தது போல் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார். அடுத்த கணையை மெல்ல எய்தார்.

“இதைப் பற்றித் தெரியுமா? உங்களைப் போலவே ஏற்கெனவே எங்களிடம் சிறைப்பட்டிருக்கும் அந்தப் புலித் தோல் அங்கி இளைஞன் பாண்டிய அரச மரபைச் சேர்ந்தவன் என்கிற இரகசியத்தையும் நான் அறிவேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/358&oldid=946575" இலிருந்து மீள்விக்கப்பட்டது