பக்கம்:நித்திலவல்லி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“பொறுத்தருள வேண்டும் ஐயா! தாங்கள் எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு விளங்கவில்லை. நாங்கள் வெறும் குடிமக்கள், எளியவர்கள். அரச மரபுகளையும் அதன் இரகசியங்களையும் பற்றி நாங்கள் கவலைப்பட்டோ, தெரிந்து கொண்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை” என்றான் அழகன் பெருமாள். முதலில் விடிந்ததும், விடியாததுமாக உண்பதற்குப் பணியாரக் கூடையோடு வந்த ஐவரும் இப்போது வந்திருக்கும் மாவலி முத்தரையரும் ஒரே முயற்சியோடு தான் தங்கள் எதிரே நிற்கிறார்கள் என்பது நன்றாக அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது. நயமாக முயன்று, தங்களிடமிருந்து செய்திகளை அறிய அவர்கள் விரும்புகிறார்கள் என்பது அவனை மிகவும் எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. மாவலி முத்தரையர் மேலும் அவனைக் கேட்டார்:

“அப்படியானால் உங்களைப்போல எளிய குடிமக்கள் பூத பயங்கரப் படையினரைப் போன்ற மாறு வேடத்தில், கடுமையான பாதுகாப்புகளையும் மீறிக் கோட்டைக்குள் ஏன் வந்தீர்கள்?”

“கோட்டைக்குள் வரும் போதுதான் பூத பயங்கரப் படையின் உடையை அணிந்து கொண்டோம் என்பதில்லை. களப்பிரர்களது பூத பயங்கரப் படையினர் உடை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த உடைக்காகவே அப்படையில் சேர நாங்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால் யாரும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். உடைகளில் எங்களுக்குப் பிரியம் அதிகம். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.”

இதைக் கேட்டு மறுமொழி கூறாமல் விஷமச் சிரிப்புச் சிரித்து விட்டு, வாளாவிருந்தார் மாவலி முத்தரையர். அந்தச் சிரிப்பும், அந்த மெளனமும் அவர் அழகன் பெருமாள் கூறியதை ஏற்கிறாரா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள முடியாதவையாயிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/359&oldid=946576" இலிருந்து மீள்விக்கப்பட்டது