பக்கம்:நித்திலவல்லி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


இழுத்துச் செல்ல ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் கூட ஆபத்து.”

“இந்தப் பேருதவிக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை அம்மா?” என்று அவன் கூறத் தொடங்கு முன்பே அவனைப் படிக்கட்டில் இறங்குமாறு கரங்களைப் பற்றிக் கொண்டு இறைஞ்சத் தொடங்கி விட்டாள் காம மஞ்சரி.

அழகன் பெருமாளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் அந்த நிலவறை வழியில் இறங்கினார்கள். அவர்கள் சிறிது தொலைவு நடந்ததும், அந்த நிலவறை வழி மேற்புறமாக மூடப்பட்ட ஓசையும், அதையடுத்து ஒரு மெல்லிய பெண் குரல், விசும்பி விசும்பி அழும் ஒலியும் தெளிவாகக் கேட்டன.

“வாழ்க்கை எவ்வளவு விநோதமானது பார்த்தாயா? உதவி செய்கிறவர்கள் எங்கே, எப்படி, எப்போது எதிர்ப்படுவார்கள் என்று தெரியாமல், எதிர்ப்படுகிற விநோதத்தை எப்படி வியப்பதென்றே தெரியவில்லை செங்கணான்?” என்று தேனூர் மாந்திரீகனிடம் கூறிக் கொண்டே இருளில் நடந்தான் அழகன்பெருமாள். ‘இவ்வளவு மென்மையான மனமுள்ள பெண்ணையா அன்று பயமுறுத்தினோம் நாம்?’ என்று எண்ணியபோது அழகன் பெருமாளுக்கு இதயம் கூசியது.

இருளில் கைகோர்த்த படி ஒருவர் பின் ஒருவராக நெடு நேரம் நடந்தார்கள் அவர்கள்.

“ஐயா! அவள் கூறியதிலிருந்து நம் தென்னவன் மாறனும், மல்லனும் கூடச் சிறிது நேரத்திற்கு முன்பே, இந்தப் பாதை வழியாகத் தப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. நாம் விரைந்து நடந்தால், பாதை முடிந்து வெளியேறுகிற மறு முனையில் அவர்களைச் சந்தித்து விடலாம் அல்லவா?” -என்று அழகன் பெருமாளைக் கேட்டான் கழற்சிங்கன். அவர்களைச் சந்திக்க முடியுமா, முடியாதா என்பது பற்றி அழகன் பெருமாளால் அதுமானிக்க முடியாமல் இருந்தது. ஆயினும் “சந்திக்க முயல்வோம்” என்று நம்பிக்கையோடு கழற்சிங்கனுக்கு மறுமொழி கூறியிருந்தான் அழகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/363&oldid=946580" இலிருந்து மீள்விக்கப்பட்டது