பக்கம்:நித்திலவல்லி.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

365


பெருமாள். காம மஞ்சரி செய்திருக்கும் உதவியையும், தியாகத்தையும் பற்றிய சிலிர்ப்பு இன்னும் அவன் மனத்தில் இருந்தது.

‘அன்பு என்பது பெண்ணின் இதய ஊற்று! அவள் களப்பிரப் பெண்ணாயிருந்தால் என்ன? தமிழ்ப் பெண்ணாயிருந்தால் என்ன? அவள் பெண்ணாயிருப்பதை நிரூபித்துக் கொள்ள அன்புதான் ஒரே அடையாளமாயிருக்கிறதே தவிர மொழியும், இனமும், குலமும் அடையாளங்களாவதில்லை. எங்கே அன்பு முதிர்கிறதோ, அங்கே விளைகிறாள். கனிகிறாள். பெண்ணாகிறாள். எப்படியோ இருந்த இந்தக் காம மஞ்சரி என்ற அரண்மனைக் கணிகையை, நம்முடைய முரட்டுத் தென்னவன் மாறன் பாகாய் உருகிப் பணிய வைத்து விட்டானே? இவன் அவளை வெறுத்தும், அவள் இவனுக்காக உயிரை விடத் துடிக்கிறாளே; இந்த அன்பை என்னவென்று வியப்பது அரசர்களின் பகை இதயங்களின் கனிவைத் தடுக்கக் கூட முடியவில்லையே? இது பெரிய விந்தைதான்...’ என்று எண்ணி வியந்தபடியே இருளில் நடந்து கொண்டிருந்தான் அழகன் பெருமாள்.

காம மஞ்சரி எச்சரித்ததில் ஒரு சிறிதும் மிகையாக இருக்க முடியும் என்று அழகன் பெருமாளுக்குத் தோன்றவில்லை. அன்றிரவுக்குள் எப்படியும் மாவலி முத்தரையர் தங்களையும், தென்னவன் மாறனையும், மல்லனையும் கொன்று விடக் கூடும் என்பது அவனே அநுமானித்திருந்ததுதான். தன்னை அவர் தந்திரமாக வினாவியிருந்த வினாக்களுக்குத் தான் கூறியிருந்த எந்த மறுமொழியும், அவரைச் சந்தேகங்களிலிருந்து விடுவிக்காததோடு அவருடைய சந்தேகங்களை மேலும் அதிகமாக்கி விட்டிருக்கக் கூடுமென்றே அவன் புரிந்து கொண்டிருந்தான். அப்படிப் பார்க்கும் போது, இவள் செய்திருக்கும் உதவி காலமறிந்து செய்த பேருதவி என்பதில் அழகன் பெருமாளுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே ஏற்படவில்லை. இருளில் அபயம் அளிக்க வந்தது போல் ஒலித்த அவளுடைய சோகக் குரலை மீண்டும் நினைவு கூர்ந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/364&oldid=946581" இலிருந்து மீள்விக்கப்பட்டது