பக்கம்:நித்திலவல்லி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கோட்டைக்குள் தானும் நண்பர்களும் நுழைந்த போது, சிறைக் கோட்டத்துக்கு அவள் வழி சொல்லிய உதவியை விட இப்போது செய்திருப்பது பெரியதும் அரியதும் ஆகிய உதவி என்று அழகன்பெருமாள் மட்டுமின்றித் தப்பிச் சென்று கொண்டிருந்த நண்பர்கள் எல்லாருமே நினைத்தார்கள்.

நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே காரி ஒர் ஐயப்பாட்டை வினவினான்: -

“ஐயா! இந்த வழி மதுரை மாநகரின் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் கொண்டு போய் விடும் என்று அவள் கூறினாள். அங்கிருந்து அப்புறம் நாம் எங்கே போவது? எப்படிப் போவது? உப வனத்துக்குப் போவதா? இரத்தின மாலையின் மாளிகைக்குப் போவதா? வசந்த மண்டபத்தில் இருந்து நாம் நகரில் பிரவேசிப்பது துன்பங்களைத் தராது என்பது என்ன உறுதி? வசந்த மண்டப வழியாக வெளியேறாமல், இதே நிலவறை வழிக்குள்ளேயே சிறிது நேரம் தங்கலாம் என்றால் சிறைக் கோட்டத்திலிருந்து பூத பயங்கரப் படை இதே வழியில் நம்மைப் பின் தொடர்ந்தால் என்ன செய்வது? இதையெல்லாம் நாம் இப்போதே சிந்தித்துக் கொண்டு விடுவது நல்லது அல்லவா? வருமுன் காத்துக் கொள்வதுதானே சிறப்பு?”

அழகன் பெருமாள் மறுமொழி கூறினான்:

“நீ வினாவிய வினாக்கள் எல்லாமே சிந்திக்க வேண்டியவைதான்! ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். சிறைக் கோட்டத்திலிருந்து தப்பிக் கொண்டிருக்கிற நம்மை இதே வழியாகப் பூத பயங்கரப் படை பின் தொடரும் என்று சந்தேகப்படுகிறாயே; அது மட்டும் நடக்காது. அந்தப் பெண் காம மஞ்சரி நுணுக்கமான அறிவுள்ளவள். பூத பயங்கரப் படையினரின் கவனத்தைத் திசை திருப்ப ஏற்ற விதத்தில் நிலவறை வழியைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே எழாத படி வேறொரு வழியைக் கூறி, அந்த வழியாக நாம் தப்பி ஓடியதைத் தான் கண்டதாக விவரிப்பாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/365&oldid=946582" இலிருந்து மீள்விக்கப்பட்டது