பக்கம்:நித்திலவல்லி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


வேல்களையும் வாள்களையும் உருவாக்கி, அடுக்க வேண்டியிருந்தது. அன்று முதல் அந்த வேலையில் முனைந்து ஈடுபட்டான் அவன். களப்பிரர்கள் அறியாமல், உருவாக்கி மறையில் அடுக்கி நிறைக்க வேண்டிய ஆயுதங்கள் அவை. ஏற்கனவே பாண்டிய நாட்டின் வேறு பகுதிகளில் உள்ள பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான பிற கொல்லர்களும், அவனும் இப்படி நிறையப் படைக்கலன்களைச் சேர்த்து வைத்திருந்தார்கள். அந்தப் படைக்கலன்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் செயலில் மேலும் முனைந்து ஈடுபட்டான் கொல்லன். அவனுடைய நாட்கள் அதில் கழியத் தொடங்கின. காராளரைப் பொறுத்த வரை, பெரியவர் இல்லாத திருமோகூர் மந்தமாக இருப்பது போல் தோன்றிக் கொண்டிருந்தது.

விலை மதிப்பற்ற அருமருந்தில் மீதமிருக்கும் சிறிய அளவைப் போல் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் இன்று அந்த வம்சாவளியில் எஞ்சியிருக்கும் இளையநம்பி, தென்னவன் மாறன், கொற்கைப் பெருஞ்சித்திரன் ஆகிய மூவரையும் பற்றிப் பெரியவர் மதுராபதி வித்தகர், திருமால் குன்றத்து மலைப் பிளவில் ஒப்பு நோக்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனையை, அப்போது அங்கே பதற்றத்தோடு விரைந்து நுழைந்த ஆபத்துதவிகள் கலைத்தனர். வந்தவர்களுடைய பரபரப்பு, அவருடைய கவனத்தை உடனே ஈர்த்தது. வந்தவர்கள் பதற்றத்தோடு கூறலாயினர்:

“ஐயா! அபாயம் நெருங்குகிறது! இந்த மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் சிலம்பாறு தரையிறங்குமிடத்தில் உள்ள மாந்தோட்டத்திலும், சிறு சிறு குழுக்களாகக் களப்பிரர்களின் பூத பயங்கரப் படை வந்து தங்கியிருக்கிறது. இந்த நிலைமை இன்று காலையில்தான் தெரிய வந்தது. நாம் உடனே இடம் மாற வேண்டும். மலையின் உட்பகுதியில் இன்னும் நெடுந் தொலைவு தள்ளிச் சென்று தங்கி விடுவோம். அபாயத்தைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி அதுதான். உடனே புறப்படுங்கள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/369&oldid=946586" இலிருந்து மீள்விக்கப்பட்டது